கோமல் சால், குமால் சவுல், மென்மையான அரிசி, போகா சால் மற்றும் மேஜிக் ரைஸ் என்றும் அழைக்கப்படும் இந்த அரிசி அசாமின் பாரம்பரிய அரிசியாகும். இது தண்ணீரில் ஊற வைத்தால் சில நிமிடங்களிலேயே மென்மையான பஞ்சு போன்ற உணவாக மாறும் ஒரு தனித்துவமான அரிசி வகையாகும். இதனை சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அசாம் கலாச்சாரத்தில் முக்கிய பகுதியாக விளங்கும் இதனை காலை உணவாக அல்லது சிற்றுண்டியாக உண்பார்கள்.
அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வளர்க்கப்படும் இந்த அரிசிக்கு புவியியல் குறியீடு(GI) வழங்கப்பட்டுள்ளது. இதனை பால் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புரதம், கால்சியம் கொண்ட சமச்சீரான உணவாக இருக்கும். வெல்லம், வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உடலுக்கு கிடைக்கும். இதிலிருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு விரைவான ஆற்றலைத் தருகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
அசாமின் பாரம்பரிய அரிசியாக பயன்பாட்டில் இருந்த இது காலப்போக்கில் தொலைந்து போனது. ஆனால் மீண்டும் இப்போது இதன் மவுசுக் கூடியுள்ளது. ஆன்லைன் தளங்களிலும் இந்த அரிசி விற்பனை செய்யப்படுகிறது.
இது அத்தியாவசிய கலோரிகள், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து கொண்ட இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது. Ready to eat அரிசி வகையான இதனை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்தாலே மென்மையாகி உண்ணத் தயாராகிவிடும். அசாமின் பாரம்பரிய காலை உணவான ஜோல்பன்(jolpan) தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பிஹு போன்ற முக்கிய அசாமிய திருவிழாக்கள் மற்றும் மதச் சடங்குகளின் போது இது ஒரு முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது.
சமைக்க வேண்டிய அவசியம் இல்லாததால் பண்டைய காலத்தில் வயலில் வேலை செய்பவர்கள் மற்றும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த அரிசியை உடன் எடுத்துச் செல்வார்கள். இது பசி உணர்வை போக்கி நிறைவாக சாப்பிட்ட உணர்வையும் தரக்கூடியது. கோமல் சால் என்ற இந்த அரிசி கைமுறையாக பதப்படுத்தப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட போரா சால் என்ற பாரம்பரிய அரிசியை முதலில் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, பின்பு மறுநாள் அது வேக வைக்கப்படுகிறது.
வேகவைத்த அரிசியை நாள் முழுவதும் வெயிலில் உலர்த்தினால் கோமல் சால் அரிசி தயார். இது வழக்கமான அரிசியை போல் இல்லாமல் தனித்துவமான ஸ்டார்ச் அமைப்பை கொண்டுள்ளது. இது ஊற வைக்கும் பொழுது மென்மையாக மாற வழிவகை செய்கிறது.