
‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ - சந்தோஷம், சிரிப்பு இவை இரண்டும் மனிதர்களிடமிருந்து பிரியக்கூடாத விஷயங்கள். ஆனால், அதுவே அதிகமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ அவர்களிடமிருந்து வெளிப்பட்டால் அது ஏதாவது எதிர்வினையை ஏற்படுத்துமா?
என்னென்ன நன்மைகள் இதனால்?
சிரிப்பு என்பது வெறும் தன்னிச்சையாக வெளிப்படும் விஷயம் மட்டுமல்ல. இது நமது குடலையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் காக்கும் ஒரு அரண் போன்றதாகும். சிரிப்பு டோபமைன் (dopamine), செரோடோனின் (serotonin), எண்டோர்பின்கள் (endorphins) போன்ற முக்கிய நரம்பியல் (neurotransmitters) விஷயங்களை தூண்டி செயல்படுத்துகிறது என்பதை அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. காரணம் சிரிப்பு ஒருவரின் மனநிலையை உயர்த்துவது மட்டுமல்லாமல் குடல்-மூளை தொடர்பின் வழியாக செரிமானம், நோய் எதிர்ப்பு சக்திகளை ஒழுங்குபடுத்துகிறது.
உதாரணமாக செரோடோனின் 90% குடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. சிரிப்பின் போது வெளிப்படும் இந்த செரோடோனின் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. வரப்போகும் பிற விளைவுகளையும் குறைக்கிறது. மூளைக்கும் செரிமான அமைப்பிற்கும் இடையில் இருக்கும் ஒரு முக்கியமான இணைப்பான வேகஸ் நரம்பு (vagus nerve) சிரிப்பின் போது தூண்டப்படுகிறது. இதுவும் செரிமானத்தை மேம்படுத்துகிறது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துகிறது மற்றும் குடல் நுண்ணுயிர் (gut microbiome) அளவையும் சமநிலைப் படுத்துகிறது.
சிரிப்பிற்கும் அளவு உண்டோ?
உயிரியல் ரீதியாக மனிதர்களுக்கு மகிழ்ச்சி அல்லது சிரிப்பிற்கு நிலையான அளவு (குறைந்த பட்சம் அல்லது அதிகபட்சம்) என்று எதுவும் இல்லை. இருப்பினும் ஒவ்வொருவரின் உடலுக்கு என சில வரம்புகள் உள்ளன. அதிகப்படியான சிரிப்பு தசை சோர்வு (muscle fatigue), மூச்சுத்திணறல் அல்லது அரிதான சந்தர்ப்பங்களில் மயக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் இவற்றை ஆபத்தின் அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளாமல், சிலரின் உடல் இந்த அதிகப்படியான உணர்ச்சியை தாங்கிக் கொள்ளாது என்பதற்கான குறிகாட்டிகளாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிலர் மிகவும் மகிழ்ச்சியாக உணரும்போது அவர்கள் கட்டுப்பாடில்லாமல் சிரிக்கலாம் அல்லது சிலருக்கு கண்ணீர் வழிவதையும் காணலாம். இது போன்ற நிகழ்வுகள் ஆக்ஸிடாஸின்(oxytocin), எண்டோர்பின்கள்(endorphins) போன்ற ‘நல்ல உணர்வை ஏற்படுத்தும்’ இரசாயனங்களிலிருந்து வெளிப்படுகின்றன. அவை உடலை நிம்மதியாக உணர உதவுவதோடு, இயற்கையாகவே உடல் வலியையும் குறைக்கவும் உதவுகின்றன.
மறைந்திருக்கும் எதிர்வினை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் சில நேரங்களில் அது எதிர்பாராத உணர்வுகளைத் தரக்கூடும். சிலர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது பதட்டமாகவோ, குழப்பமாகவோ அல்லது குற்ற உணர்ச்சியாகவோ உணரலாம்.
சிலருக்கு அந்த தருணம் நீடிக்காது என்று கவலைப்படவோ அல்லது இதுவரை இதற்கு முன்னர் இதுபோல் அனுபவங்கள் இல்லையெனில், இது பொதுவாக அவர்களுக்குள் நிகழ்கிறது. ஆக இது ஒரு இயல்பான எதிர்வினை, அதில் தவறு ஏதுமில்லை.
அந்தந்த உணர்ச்சிகள் நம்மை எவ்வளவு ஆழமாக பாதிக்கின்றன என்பதையே காட்டுகிறது. சில நேரங்களில் பித்து(mania) போன்ற அரிதான மனநல குழப்ப நிலைமைகளில் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாகவோ அல்லது உற்சாகமாகவோ உணரலாம். இந்த அதீத மகிழ்ச்சி அவர்களை தெளிவாக சிந்திக்கவோ அல்லது சரியான முடிவுகளை எடுக்கவோ கடினமாக்கும்.
காலப்போக்கில் அதன் விளைவுகளை உணராமல் அவர்களை ஆபத்தான வழிகளிலே செயல்பட வைக்கலாம். எனவே, மகிழ்ச்சியாக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சமநிலையுடன் (balanced) இருப்பதும் முக்கியம் தான். காரணம் உணர்ச்சிகளை என்றைக்கும் நம்மை முழுமையாக ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)