Leadless pacemaker: இதயத்திற்குள் செல்லும் குட்டி ரோபோக்கள்! கம்பி இல்லாமல் இயங்கும் அதிசயம்!

Leadless pacemaker technology
Leadless pacemaker Image credit: AI image
Published on

உலக மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, இதயத் துடிப்பைச் சீராக்கும் ‘இரட்டை அறை கம்பி இல்லா பேஸ்மேக்கர்’ (Dual-Chamber Leadless Pacemaker) தொழில்நுட்பம் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதய நோயாளிகளுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரையில் வாசிப்போம்.

தற்போது வழக்கத்தில் உள்ள பேஸ்மேக்கர்கள் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளன என்றாலும், அறுவை சிகிச்சை செய்து தோலுக்கு அடியில் மின்கம்பிகள் பொருத்தும்போது நாளடைவில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது; மின்கம்பி இடப்பெயர்வு சார்ந்த சில சவால்களும் இதில் உள்ளன.

ஆனால், இந்த நவீன கம்பி இல்லா பேஸ்மேக்கரில் (Leadless pacemaker) இது போன்ற பிரச்னைகள் எதுவும் கிடையாது. இந்த ‘இரட்டை அறை கம்பி இல்லா பேஸ்மேக்கரைப்' பொருத்தும்போது, இரண்டு சிறிய தானியங்கிச் சாதனங்களை நேரடியாக இதயத்திற்குள் பொருத்துகிறார்கள். இவற்றில் ஒன்று ‘வலது ஏட்ரியம்’ (Right Atrium) எனப்படும் இதயத்தின் வலது மேல் அறையிலும், மற்றொன்று ‘வலது வென்ட்ரிக்கிள்’ (Right Ventricle) எனப்படும் இதயத்தின் கீழ் அறையிலும் பொருத்தப்படுகின்றன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று கம்பி இல்லா முறையில் தொடர்புகொண்டு, இதயத்துடிப்பை இயல்பாக வைக்க உதவுகின்றன.

கம்பி இல்லா பேஸ்மேக்கர் ஒரு உயிர்காக்கும் மாற்றாக அமைந்துள்ளது. இந்தக் கருவியைப் பொருத்தும் பணி, காலில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஒரே நாளுக்குள் நோயாளி தன் இயல்பான நடவடிக்கைகளுக்குத் திரும்ப முடியும். 70 வயதிற்கு மேற்பட்ட, பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு இது புதிய நம்பிக்கையைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
இது புதுசு: வயர்லெஸ் பேஸ்மேக்கர்
Leadless pacemaker technology

குறைந்தபட்ச ஊடுருவல் (Minimally Invasive) கொண்டது என்பதால் இதைப் பொருத்துவது சுலபம். மின்கம்பிகள் தொடர்பான அபாயங்களை இது குறைப்பதோடு, நீண்ட காலப் பாதுகாப்பையும் தருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் வருகையால் நோயாளிகள் அதிக சுதந்திரத்துடனும், குறைவான மருத்துவக் கட்டுப்பாடுகளுடனும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். 70 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த புதிய கம்பி இல்லா பேஸ்மேக்கர் ஒரு வரப்பிரசாதமாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com