

இதயத்துடிப்பு சீராக இல்லாமல் மெதுவாகவோ அல்லது வேகமாகவோ இருந்தால் படபடப்பு, தலை சுற்றல், மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு பேஸ் மேக்கர் தான் சிறந்த தீர்வு. இதயத்துடிப்பு இயல்பாக நடைபெற பேஸ்மேக்கர் செயல்படுகிறது. மின் சாதனமான இக்கருவி இதய அறைகளுக்கு கிடையே ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
தற்போது வழக்கத்தில் உள்ள பேஸ் மேக்கரில் பல்ஸ் ஜெனரேட்டர் இதயத்துடன் பேஸ்மேக்கரை பொருத்த வசதியாக மின் முனையுடன் இணைந்த தாமிர கம்பிகள் இருக்கும். இவை கழுத்து எலும்பின் கீழ் பொருத்தப்பட்டு இதயத்தின் மேல் கீழ் அறைகளுடன் இணைக்கப்படும்.
அறுவை சிகிச்சை செய்து மேல் தோல் கீழ்பகுதியில் பேஸ் மேக்கர் பொருத்த, சில நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி வரும். கருவி பொருத்தப்பட்ட பகுதியில் தோல் சற்று மேடாக தெரியும். இது சிலருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவை தவிர வீக்கம், ரத்தக்கசிவு, இரத்த குழாயில் அடைப்பு, கம்பி முறிவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். அறுவை சிகிச்சை செய்வதால் தழும்புகள், வீக்கம் இருக்கும்.
இதற்கு மாறாக தற்போது வயர்லெஸ் பேஸ்மேக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பெரிய விட்டமின் மாத்திரை அளவில் பேஸ்மேக்கர் பொருத்துவதற்கு பதிலாக இந்த ஒயர்லெஸ் பேஸ் மேக்கர் இடுப்பு பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாக செலுத்தி நேரடியாக இதயத்தின் கீழ் வலது அறைக்குள் பொருத்தப்படுகிறது.
இதற்கு கம்பிகள் அவசியம் இல்லை. எனவே தொற்றுநோய் அபாயம் குறையும். இதயத்துடிப்பு அறிந்து செயல்படும் நுண்ணறிவு கருவிகள் இதில் உள்ளது. இது இதயத்தின் கீழ் அறையில் பொருத்தப்பட்டு மேல் அறையுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதய அடைப்பு உள்ளவர்களுக்கு இதயத்துடிப்பை உறுதி செய்கிறது.
இந்த புதிய பேஸ்மேக்கர் உடலில் பொருத்தப்பட்டுள்ளது என்ற உணர்வே ஏற்படாது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. இத்தகைய புதிய தொழில்நுட்பத்தால் அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் 65% குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது இதய நோயாளிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இருந்தாலும் கம்பி இல்லா பேஸ் மேக்கரை பொருத்துவதில் பொறுமை அவசியம். மருத்துவரின் ஆலோசனையும் ஒப்புதலும் மிக மிக அவசியம்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)