தரையில் உட்கார்ந்து உணவருந்தும் கலாச்சாரம் மாறி இன்று நடந்தும், நின்றுகொண்டும், நாற்காலியில் அமர்ந்துகொண்டும் உணவருந்துகிறோம்.
சாணம் பூசிய தரையில் பனை ஓலை தடுக்கில் முன் பக்கம் உணவை பார்த்தப்படி சப்பணமிட்டு உட்கார்ந்து உணவருந்த வேண்டும் என்பது பழையகாலப் பழக்கம். இந்தக் காலகட்டத்தில் டைனிங் டேபிளுக்கு முன்னிருந்து டெலிவிஷன் நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டே உணவருந்துகிறோம்.
ஒரே இடத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மீதுள்ள நமது எண்ணம் மூளையில் ஒரு முகப்படுத்துகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது வயிற்றுக்கும், மூளைக்கும், இடையேயான நரம்புகளின் சிக்னல்கள் சரியாக கடத்தப்பட்டு வயிறானது நிரம்பியதும் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. நின்று கொண்டு உணவருந்தினால் மிதமிஞ்சி உணவருந்த வாய்ப்பு உண்டு. அதிகமாக உண்ணுவதும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் நாம் அறிவோம். வயிறு நிரம்ப உண்ணாதவர்கள் பல்வேறு நோய்களில் இருந்து விலகி இருப்பார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாம் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது நமது உடல் அமைப்பு சரியான நிலையில் அமைகிறது. முதுகு தண்டு வடம் நேராக அமைகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது குனிந்து சாப்பிடுவதும் பிறகு நேராக அமர்வதும் ஜீரண மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இந்த முன் மற்றும் பின்னோக்கிய நகர்வு ஜீரண சுரபியை அதிகரித்து நமது ஜீரணிக்கும் வேலையை வேகப்படுத்துகிறது.
குறுக்கு கால்களுடன் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் நமது செரிமான செயல்முறைகள் மேம்படுகின்றன. சாப்பாடு தட்டை தரையில் வைத்து, சாப்பிடுவதற்கு குனிந்து, நிமிர்ந்து உடலை அசைக்கும்போது வயிற்று தசைகள் தூண்டப்பட்டு அமிலங்களின் சுரப்பை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொழுப்பு குறைக்கப்படுகிறது. மேலும், மனதை தளர்த்துவதற்கும், சோர்வு மற்றும் உடல் பலவீனத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கால்கள் மடக்கி இருப்பதால் நம் உடலில் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நரம்புகளை அமைதி படுத்துகிறது. பதற்றத்தில் இருந்து விடுபடுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நம் உடல், மற்றும் இதயத்தில் அழுத்தம் குறைவாக உள்ளது. ரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராகப் பரவுகிறது.
தசை மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. உடலிற்கு நெகிழ்வு தன்மையை அளித்து கால்களுக்கு வலிமைத் தருகிறது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்து எழுந்திருக்கும் கலையைப் பயிற்சி செய்வதற்கு முக்கிய வலிமையும், சுறுசுறுப்பும் தேவை.
நாம் உணவை உண்பதற்காக கால்களை மடக்கி உட்கார்ந்துகொள்வது நம்மை அடக்கமாக ஆக்குகிறது. நம்மை நல்ல தோரணையில் வெளிபடுத்தும். தரையில் உட்கார்ந்து உணவருந்தும்போது நம் குடும்பத்தினர் களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்க்காமல் ஒருவரோடொருவர் கலந்து பேசி சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.