
கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது சகஜம் தான். அதற்கான சரியான தீர்வு தர்பூசணி பழமாகும். கோடைக்காலத்தில் அதிகப்படியாக விற்பனையாகும் இந்த பழம் விலையும் மலிவு, சுவையும் அலாதியாக இருக்கும். இருப்பினும், தர்பூசணியை சாப்பிடுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அதிகமாக தர்பூசணியை சாப்பிடுவதால் உடலுக்கு சில தீமைகள் ஏற்படும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்...
1. தர்பூசணியில் அதிகமாக தண்ணீர் இருக்கிறது. இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். ஆனால், அதிகமாக தர்பூசணியை சாப்பிடுவது சோர்வு மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
2. தர்பூசணியில் அதிகமாக நீர்சத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. இது வயிற்றுப்போக்கு, வாய்வு, அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, அளவாக தர்பூசணியை சாப்பிடுவது நல்லது.
3. இதய சம்மந்தமான நோய் இருப்பவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், தர்பூசணியில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது இதயத் துடிப்பிற்கு தீங்கு விளைவிக்கும்.
4. இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாக கொண்டவர்கள் தர்பூசணி பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தர்பூசணி கிளைசெமிக் குறியீடு அதிகம் கொண்ட பழமாகும். இது உடலில் உள்ள குளுக்கோஸை அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.
5. தர்பூசணியை அதிக அளவில் சாப்பிடும் போது கல்லீரலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, இதை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.
6. தர்பூசணி குளிர்ச்சியான பழம் என்பதால் அதிகமாக அதை சாப்பிடும் போது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கோடைக்காலமாக இருந்தாலுமே தர்பூசணியை அளவோடு சப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மையைத் தரும்.
7. 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் உள்ளன. எனவே, தினமும் 300 கிராமுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
8. இரவில் தர்பூசணியை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இரவில் தர்பூசணியை சாப்பிடுவதால் செரிமான பிரச்னை, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
எனவே, தர்பூசணி உங்களுக்கு பிடித்த பழமாகவே இருந்தாலும், அளவோடு சாப்பிட்டு ஆனந்தமாக வாழுங்கள்.