
நம்மிடம் கைவசமே இருக்கிறது நாட்டு மருந்து பொருட்கள். அதை எளிய வகையில் முறைப்படி சாப்பிட்டு வந்தாலே போதும் ஆரோக்கியமாக வாழலாம்.
காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்,
ஒரு மண்டலம் சாப்பிட்டு வர கிழவன் கூட குமரன் ஆவானே என சித்தர்கள் பாடியுள்ளாா்கள்.
அதேபோல எல்லா மூலிகைகளிலும் நமக்கு தேவையான மருத்தவ குணங்கள் உள்ளன. மனிதன் கூட குணம் மாறலாம். மூலிகை மருந்துகளின் மருத்துவ குணங்கள் மாறவே மாறாது. பொதுவாக எதையும் அளவோடு சாப்பிடவேண்டும். அதுவே நல்லது, ஆபத்தில்லாதது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.
இஞ்சி சுவாசமண்டலத்தை சரிசெய்யும் ஆற்றல் உடையது. இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நோய் எதிா்ப்பு சக்தி அதிகமாகும்.
வயிறு உப்புசம், வயிறு பொருமல், வாய்வுத்தொல்லை, நெஞ்சு எாிச்சல், நீங்கிட சுக்குப்பொடியை சூடான வெந்நீாில் போட்டு நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மேற்படி தொல்லைகள் வராது.
கடுக்காய்பொடி ஒரு ஸ்பூன் எடுத்து சூடான வெந்நீாில் கலந்து இரவு ஆகாரத்திற்கு பின்னர் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் தீரும்.
ஏலக்காய் வாசனைப் பொருள் மட்டுமல்ல பித்தம், கபம், இவைகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது.
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை, தயிர் அல்லது மோாில் அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட உஷ்ணத்தால் வரும் வயிற்றுவலி குணமாகும். அதோடு நீா்க்குத்தல் இருந்தாலும் சீராகும்.
கடுமையான வாந்தி வந்தால் வசம்புத்துண்டை எடுத்து நெருப்பில் சுட்டு கரியாக்கி கரித்தூளை தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
லவங்கப்பட்டையை பொடியாக்கி பல்வலி உள்ள ஈறுகளில் வைத்து அடக்கி உமிழ்நீரை உமிழ்ந்து கொண்டிருந்தால் கடுமையான பல்வலி குறையும்.
கடுமையான உஷ்ண மேலீட்டால் வயிற்றுப்போக்கு இருக்கும் நிலையில்அதைக் கட்டுப்படுத்த கரிமஞ்சளை தண்ணீா் விட்டு அரைத்துஅந்த விழுதோடு தேன் விட்டு சிறிய சிறிய உருண்டைகளாக சாப்பிட குணம் தொியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)