மெக்னீசியம் நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு தாது உப்பு. எலும்பு ஆரோக்கியம், இதய செயல்பாடு, நரம்பு மண்டலம் உட்பட பல உடல் செயல்பாடுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பல காரணங்களால் நம் உடலில் மெக்னீசியம் குறைபாடு ஏற்படலாம். இந்த குறைபாடு பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்தப் பதிவில் மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதை சரி செய்யும் வழிகள் பற்றி பார்க்கலாம்.
மெக்னீசியம் என்பது ஒரு தாது உப்பு. இது உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்களின் செயல்பாட்டிற்கு அவசியம். எலும்புகள், தசைகள் இதயம் மற்றும் நரம்புகள் போன்ற உடலின் பல பகுதிகளில் இது காணப்படுகிறது. மெக்னீசியம் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தசைச் சுருக்கங்களை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்:
மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை மற்றும் பல நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்துப் போகலாம். இருப்பினும் சில பொதுவான அறிகுறிகள் உள்ளன.
தசைப்பிடிப்பு
உடல் வலி
தூக்கமின்மை,
சோர்வு
உடல் பலவீனம்
மனச்சோர்வு
மன அழுத்தம்
தலைவலி
பதட்டம்
உடலில் சில பகுதிகளில் உணர்வின்மை
மெக்னீசியம் குறைபாட்டின் காரணங்கள்:
தவறான உணவு முறை காரணமாக மெக்னீசியம் குறைபாடு ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், ஆல்கஹால் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது மெக்னீசியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
நீண்ட காலமாக சில வகையான மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்வது, உடல் மெக்னீசியன் சத்தை உறிஞ்சும் தன்மையைக் குறைக்கலாம். சில வகையான குடல் பிரச்சினைகள் காரணமாகவும் மக்னீசியம் குறைபாடு ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மெக்னீசியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் மெக்னீசியம் குறைபாடு ஏற்படலாம்.
மெக்னீசியன் குறைபாட்டை சரி செய்யும் வழிகள்:
மெக்னீசியம் குறைபாட்டை சரி செய்ய பல எளிய மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன. உங்கள் உணவுப் பழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வது மூலமாகவே எளிதில் உடலில் மக்னீசியம் அளவை அதிகரிக்கலாம். எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.
பசலைக்கீரை, முள்ளங்கிக் இலை போன்றவற்றில் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. பாதாம், முந்திரி, வெள்ளை எள், ப்ரோக்கோலி போன்றவற்றிலும் மெக்னீசியம் உள்ளது. வாழைப்பழம் அவகாடோ, பேரிக்காய், போன்ற பழ வகைகளை தொடர்ச்சியாக உட்கொள்வது மெக்னீசியம் சத்தை அதிகரிக்க உதவும். முழு தானியங்கள், பருப்பு வகைகள் நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றிலும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் உங்கள் உடலின் மக்னிசியம் தேவையை ஈடு செய்ய முடியும்.