

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறிப்பிட்ட பருவக் காலத்தில் மட்டுமே சைனஸ் பிரச்னை (Sinus Problem) ஏற்படும். இன்று எல்லா பருவத்திலும் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக நகரங்களில் சைனஸ் பிரச்னை அதிகரித்து உள்ளது. காரணம் எங்கு பார்த்தாலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; வாகனப் புழுதியும் ஒரு காரணம்.
இந்தப் பிரச்னை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன. சிலர் டாக்டரிடம் செல்லாமல் அவர்களாகவே மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். எல்லா சைனஸும் தொற்று கிடையாது. ஒவ்வாமை பிரச்னையால் தான் சைனஸ் ஆரம்பிக்கிறது. இதற்கு ஆண்டிபயாட்டிக் ஆண்டி வைரல் மருந்துகள் எந்த விதத்திலும் பயன் அளிக்காது.
அலர்ஜியால் ஏற்பட்ட பிரச்னைக்கு அதைத் தூண்டிய காரணி எது என்பதை கண்டறிந்து அதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தூசி, புழுதி இவை காரணம் என்றால் தூசி இருக்கும் இடங்களுக்கு செல்வதற்கு முன்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
வெளியில் எங்கு சென்று விட்டு வந்தாலும், உடனடியாக படுக்கையில் படுக்கக் கூடாது. முகம், கை கால்களை சுத்தம் செய்து விட்டு பின்னர் தான் படுக்கவோ, உட்காரவோ செய்ய வேண்டும்.
படுக்கை விரிப்புகள், திரைச் சீலைகள் இவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பல் துலக்குவது, குளிப்பது போன்று மூக்கை சுத்தம் செய்ய நேசல் வாஷ் கிட் என்ற உபகரணம் கடைகளில் கிடைக்கும். அலர்ஜி தன்மை இருப்பவர்கள் தூசு, மாசு அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் இந்த கிட்டை பயன்படுத்தலாம்.
இந்தக் கிட் கிடைக்காத பட்சத்தில் 50 எம் எல் சிரஞ்சில் ஊசியை அகற்றிவிட்டு மருத்துவமனையில் பயன்படுத்தும் சலைன் வாட்டரை நிரப்பி மூக்கின் வழியே உள்ளே செலுத்தி சுத்தம் செய்யலாம். எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் சுத்திகரிக்கப்பட்ட 250 மில்லி குடிநீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து மூக்கை சுத்தம் செய்யலாம்.
நம் நாட்டில் எட்டில் ஒருவர் சைனஸ் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார். இதற்கு 40 சதவீதம் மாசு, புழுதி தான் காரணம். ஆஸ்துமா கோளாறு முதலில் சைனஸ் பிரச்னையில் தான் ஆரம்பிக்கும். சுவாசப் பாதையின் கீழ் பகுதியில் ஏற்படும் அலர்ஜியை ஆஸ்துமா என குறிப்பிடுகிறோம். மனித உடலில் இயற்கையில் ஒரு சுவாசப் பாதை தான் உள்ளது. நம் புரிதலுக்காக மேல், கீழ் என்று பிரித்து சொல்கிறோம்.
ஆஸ்துமாவிற்கு என்று தனியாக சிகிச்சை இல்லை. அலர்ஜிக்கு தான் சிகிச்சை செய்ய முடியும். ரத்த பரிசோதனைகளின் போது இம்யூனோ குளோபிளின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பது தெரிய வந்தால், ஏதோ ஒரு வெளிப்புற காரணியின் காரணமாக தூண்டுதல் இருப்பதை புரிந்துக் கொள்ளலாம்.
இந்த பரிசோதனையில் மூக்கு, வாய் வழியாக நுழையும் காற்று உணவுப் பொருட்களில் எது நமக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். துவரம் பருப்பு, பால் பொருட்கள், முட்டை என எது வேண்டுமானாலும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, காற்று மாசு, தூசி இவற்றில் இருந்தும் நமக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)