மழைக்காலத்தையும், சோளத்தையும் பிரிக்க முடியாது. சூடான சோளத்தை வேகவைத்து மழைக்காலத்தில் உண்பது ஒரு ஆனந்தமான அனுபவம். சோளத்தில் வெறும் சுவை மட்டுமில்லாமல், எண்ணற்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. எனினும், தற்போது அதிகமாக விற்கப்படும் ஸ்வீட் கார்னில் உள்ள சத்துக்கள் பற்றியும், ஸ்வீட் கார்ன் மற்றும் நாட்டு மக்காச்சோளத்தில் எது சிறந்தது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்வீட் கார்ன் ஹைபிரீட் விதைகளில் இருந்து உருவாவதாகும். இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. இதற்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஸ்வீட் கார்ன் முழுமையாக முதிர்ச்சியடைவதற்கு முன்பே அறுவடை செய்யப்படுகிறது. அதாவது சர்க்கரை ஸ்டார்ச்சாக மாறுவதற்கு முன்பே எடுக்கப்பட்டு விடுகிறது. அதனால்தான் ஸ்வீட்கார்னில் அதிக இனிப்பு மற்றும் சாறு இருக்கிறது. ஸ்வீட்கார்ன் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
நாட்டு மக்காச்சோளம் குறைந்த தண்ணீர் மற்றும் உரத்தைக் கொண்டே நன்றாக வளரக்கூடியதாகும். இதற்கு குறைவான பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தினாலே போதுமானது. ஸ்வீட் கார்ன் போல அல்லாமல் மக்காச்சோளம் நன்றாக முதிர்ச்சியடைந்த பிறகே அறுவடை செய்யப்படுகிறது.
எனவே, இதில் இருக்கும் சர்க்கரை ஸ்டார்ச்சாக மாறிவிடுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துவதில்லை. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. சோளத்தில் நார்ச்சத்து, வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் 'அனிமியா' வராமல் பாதுகாக்கும். இதை எடுத்துக்கொள்வதால், குடல் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தினமும் சோளத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதாகும். ஏனெனில், சோளத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் Zeaxanthin, lutein உள்ளது. இது கண்களைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல், பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. Glycemic index ல் 55க்கு கீழ் இருக்கும் உணவுகள் அனைத்துமே ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. வேகவைத்த சோளத்தின் Glycemic index 52 ஆகும். எனவே, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட வேகவைத்த சோளத்தை எடுத்துக்கொள்ளலாம்.