

காசநோய் இன்னும் மரணத்திற்கு காரணமான தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது. இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் நோய். 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் ' என்ற பாக்டீரியா வகை கிருமிகளால் மிக அதிகமான அளவிலும், 'மைக்கோ பாக்டீரியல் போவில் , மைக்கோ பாக்டீரியல் ஆப்பிரிக்கானம்' என்ற நோய் கிருமிகளால் சிறிய அளவிலும் மனிதர்களுக்கு காசநோய் எனும் டி.பி நோய் ஏற்படுகிறது.
டி.பி பாக்டீரியா நுண் கிருமி காற்றின் மூலம் பரவுகிறது. இது முதலில் நுரையீரலை பாதிக்கிறது. தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி மற்றும் இரவில் வேர்ப்பது போன்றவை இதன் அறிகுறிகள். உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் டி.பி யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இந்தோனேசியா உள்ளிட்ட 22 க்கும் மேற்பட்ட நாடுகளில் டி.பி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்.
காச நோயாளிகள் ஒருமுறை இருமினால் கிட்டத்தட்ட3000 கிருமிகள் வெளியேறி பரவுகிறது என்கிறார்கள். இந்த கிருமிகள் காற்றின் மூலம் பறந்து சென்று மற்றவர்களின் நாசித்துவாரங்கள் வழியாக சென்று நோயை பரப்புகின்றன. ஒவ்வொரு ஆண்டும் காசநோய் பரவுதல் பற்றியும் அதை தடுப்பது பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மார்ச் மாதம் 24 ம் தேதியை சர்வதேச காசநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் உள்ள மொத்த டி.பி நோயாளிகளில் 25 சதவீதம் பேர் இருப்பது இந்தியாவில் தான். ஒவ்வொரு நிமிடமும் டி.பி நோயால் ஒருவர் இறக்கிறார். சளியில் டி.பி கிருமி இல்லாத எக்ஸ்ரேயில் தெரியக்கூடிய டி.பி கூட உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கூட பரவக்கூடியது.
டி.பிநோயால் பாதிக்கப்படுகின்றனர். சளி பரிசோதனை மூலம் எளிதாக டிபி நோயை எளிமையாக கண்டு பிடிக்க முடியும். காச நோய் முற்றிலுமாக தவிர்க்கப்படக்கூடிய மற்றும் முழுமையாக குணப்படுத்தக்கூடிய நோய் என்பதை முதலில் உணர்ந்திட வேண்டும்.
சுத்தமான காற்று, சத்தான உணவு, குடி தண்ணீரை நன்கு காய்ச்சி குடித்தல் போன்றவற்றின் மூலம் காசநோய்யை முன் கூட்டியே தவிர்க்க முடியும். ஊட்டச்சத்து மற்றும் அவித்த காய்கறிகள், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனி, சீதாப்பழம் போன்ற பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். டி.பி நோயாளிகள் அதன் தீவிரம் குறைய புரதச்சத்து நிறைந்த முட்டை, மீன் போன்றவைகளையும், பசும் பாலையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதோடு மருத்துவர்கள் தரும் மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
டிபி நோயாளிகள் இருமல் வரும் போது கைக்குட்டை அல்லது துண்டு துணி மூலம் வாயை மூடிக் கொண்டால் காற்று மூலம் டி.பி கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும். டி.பி நோயாளிகள் இருமி துப்பும் சளியை தனியாக சேகரித்து வீட்டிற்கு வெளியே கொட்டாமல் எரித்து விட வேண்டும்.
காசநோய் ஆறு மாதங்கள் தொடர் சிகிச்சை மூலம் குணப்படுத்த கூடியது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் மருத்துவர்கள் தரும் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொண்டாலே நோய் தொற்று பரவாது. உணவு கட்டுபாடுகள் கிடையாது. இயல்பான வாழ்க்கை வாழலாம். புரதம்ந நிறைந்த உணவுகள் மற்றும் சுத்தமான காற்று மற்றும் குடிநீர் காசநோய்யை விரைவில் குணப்படுத்தும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)