நுரையீரல் நன்கு இயங்க, செரிமான மண்டலம் சிறக்க, எலும்புகள் பலம் பெற, ஆண்கள் மற்றும் பெண்கள் பாலியல் நலன் சிறக்க, இரத்த சர்க்கரை அளவை குறைக்க, முடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க, உடலில் கெட்ட கொழுப்பு கரைய என பல்வேறு விஷயங்களுக்கும் மாதுளம் பழம் பரிந்துரைக்கப்படுகிறது.
மாதுளையில், ‘புனிகலஜின்’ (Punicalagin) எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து அதில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதய நோய்களையும் தடுக்கும் ஆற்றல் மிக்கது.
இந்தளவுக்கு ஆற்றல் மிக்க அந்தப் பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை இதுவரை நாம் குப்பையில்தான் போட்டிருப்போம். ஆனால், மாதுளையின் தோலில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளம் பழத்தின் தோல் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்டது. பல்வேறு நோய்களை குணப்படுத்தப் பயன்படும் மாதுளம் பழத்தின் தோலினை காய வைத்து பவுடர் செய்து சுடுநீரில் கலந்து சாப்பிடலாம்.
வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். கஷாயம் போட்டு, குடிக்கலாம். வயிற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்னைகளைத் தீர்க்க இது உதவுகிறது. வீக்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு ஆகியவற்றைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரலை சுத்தம் செய்கிறது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
வயது மூப்பின் காரணமாக வரும் அல்சைமர் எனும் மறதி நோய்க்கும், பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோய்க்கும் மாதுளை பழத்தோலை மருந்தாகப் பயன்படுத்த முடியும் என இங்கிலாந்தின் பட்டர் பீல்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பெருமளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் மூலக்கூறுகள் மாதுளம் பழத்தின் தோலில்தான் உள்ளது. மாதுளம் பழத்தின் விதைகளில் இல்லை என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
மாதுளம் பழத்தின் தோலின் மூலக்கூற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மருந்துகளை முடக்குவாதத்திற்கும், தீ காயத்திற்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த மாதுளையின் தோலை பயன்படுத்தலாம். ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றவும் மாதுளையின் தோலை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.
செரிமானத் திறன் சிறப்பாக இருந்தால் கல் கூட ஜீரணமாகும் என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களுடைய செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க மாதுளையின் தோலை பயன்படுத்தி டீ செய்து குடிக்கலாம். மழைக்காலங்களில் காலையில் எழுந்தவுடன் மாதுளை தோல் டீ குடிக்கலாம். இதை குடித்துப் பாருங்கள் சளி பிடிக்கவே பிடிக்காது.
கடுமையான வயிற்று வலி ஏற்படும்போது மாதுளம் பழத்தின் பிஞ்சை அரைத்து மோரில் கலந்து குடித்தால் சரியாகும் என்பது பலருக்குத் தெரிந்த நம் பாட்டி வைத்தியம். மாதுளை பழத்தின் தோல் உங்களை வலுவாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும். இதில் உள்ள வைட்டமின் C உடலின் குணப்படுத்தும் ஆற்றலை விரைவுப்படுத்துகிறது. இதனால் நோய் அல்லது காயங்களில் இருந்து விரைவில் மீண்டு வரலாம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆயுள் முழுவதும் எலும்புகள் பலமாக இருக்க மாதுளை தோல் டீயை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
50 கிராம் மாதுளம் பழ தோலின் பொடியை எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும். இதோடு 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஒரு பேஸ்ட் பக்குவத்திற்கு ரெடி செய்து கொள்ளவும். மேலும் இந்தப் பேக்கை முடியில் அப்ளை செய்வதற்கு, முதல் நாள் இரவில் நம் தலையில் தேவையான அளவு எண்ணெய் வைத்துக் கொள்வது நல்லது.
இப்போது இதை தலைமுடி மற்றும் வேர் கால்கள் ஆகியவற்றில் நன்றாக தேய்த்து ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சீகைக்காயை தேய்த்து நம் தலைமுடியை நன்றாக வாஷ் செய்து கொள்ளவும். மேலும் இந்த ஹேர் பேக்கை மாதத்தில் 3 முறை செய்து வருவதன் மூலம் நம் தலைமுடி அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும். பேன் மற்றும் பொடுகு தொல்லையும் மறையும்.