பிரசவத்திற்குப் பின் பெண்களின் மூளையில் நடக்கும் மேட்ரெசென்ஸ் மாற்றம்!

பருவமடைவது போல தாய்மை அடையும் போது பெண்களுக்கு ஏற்படும் 'மேட்ரெசென்ஸ்' மாற்றங்கள்!
மேட்ரெசென்ஸ் - தாய்மைப் பருவம்
மேட்ரெசென்ஸ் - தாய்மைப் பருவம்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மேட்ரெசென்ஸ் (Matrescence) என்பது ஒரு பெண் தாயாக மாறும் பொழுது அவளுடைய உடல், மனம், ஹார்மோன்கள் மற்றும் சமூக உறவுகளில் ஏற்படும் ஒட்டுமொத்த மாற்றம் ஆகும். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது எப்படி ஒரு தாய் பிறக்கிறாளோ, அதேபோல ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் இந்த மறுபிறப்பு அல்லது உருமாற்றமே மேட்ரெசென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

மேட்ரெசென்ஸ் காலத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் முக்கிய மாற்றங்கள்:

உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்:

கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு உடலில் பெரிய அளவில் ஹார்மோன் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இவை தாயின் உடலிலும், மூளையின் அமைப்பிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மூளை மாற்றங்கள் குழந்தை பிறந்த பிறகு குறைந்தது 2 ஆண்டுகள் வரை நீடிக்கின்றன. இது பெண்ணின் மூளையின் கட்டமைப்பைக் கூட தற்காலிகமாக மாற்றி அமைத்து, குழந்தையைப் பராமரிக்கும் திறனை மேம்படுத்துகிறது.

உளவியல் மாற்றங்கள்:

புதிய பொறுப்புகள், தூக்கமின்மை மற்றும் குழந்தையின் மீதான பயம் கலந்த அன்பு போன்றவற்றால் மனநிலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் (Mood swings) ஏற்படுகின்றன. குழந்தை பிறப்புக்கு முந்தைய தனது பழைய வாழ்க்கைக்கான ஏக்கம், சுய அடையாளக் குழப்பம் ஆகியவை ஒரே நேரத்தில் பெண்ணின் மனதில் எழுகின்றன.

அடையாள மாற்றம்:

அதுவரைத் தனியாக, சுதந்திரமாக இருந்த ஒரு பெண் சட்டென்று தன் தேவைகளை விட குழந்தையின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் பழக வேண்டும். நான் யார்? என்ற சுய அடையாளக் குழப்பம் இந்தக் காலத்தில் பொதுவாக வரும்.

சமூக உறவுகளில் மாற்றம்:

கணவன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவுகளில் புதிய எல்லைகளும் மாற்றங்களும் உருவாகின்றன. அவர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் மீதும், வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நாம் ஏன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் தெரியுமா?

பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression) மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. ஆனால் மேட்ரெசென்ஸ் என்பது ஒரு நோயல்ல; அது ஒரு இயல்பான வளர்ச்சி நிலை. ஒரு நபர் பருவமடையும் பொழுது (adolescence) உடலில் மற்றும் மனதில் எப்படி எல்லாம் குழப்பங்களும் மாற்றங்களும் ஏற்படுகின்றதோ அதேபோன்ற ஒரு தவிப்பும் மாற்றமும் தான் தாய்மை அடையும் பொழுதும் ஏற்படுகிறது.

மேட்ரெசென்ஸ் - தாய்மைப் பருவம்
மேட்ரெசென்ஸ் - தாய்மைப் பருவம்Image Credit: ChatGPT

இதை உணர்ந்து கொள்ளும் பொழுது புதிய தாயாக மாறியிருக்கும் பெண்கள் தங்களுக்குள் ஏற்படும் குழப்பங்களை நினைத்து குற்ற உணர்ச்சி அடையாமல் இது ஒரு இயல்பான மாறுதல் காலம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். குழந்தை பெற்றெடுத்த உடனே ஒரு பெண் தானாகவே பக்குவப்பட்ட தாயாக மாறிவிடுவதில்லை. அவளும் படிப்படியாகத் தான் வளர்கிறாள் என்பதை உணர்த்துவதே மேட்ரெசென்ஸ்.

பதின்பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் அதே புரிதலையும் சலுகையையும், புதிதாக தாயான ஒரு பெண்ணுக்கும் சமூகம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த அறிவியல் சொல் வலியுறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
உயிரியல் உலகை அதிரவைத்த AI: DNA-வில் ஒளிந்திருந்த புதிய ரகசியம்!
மேட்ரெசென்ஸ் - தாய்மைப் பருவம்

பருவமடையும் காலத்தை Adolescence என்று நாம் அழைப்பது போல, ஒரு பெண் தாயாக மாறும்போது கடந்து செல்லும் இந்த முக்கியமான பரிணாமக் கட்டத்தை Matrescence என்கிறோம். 1973 ஆம் ஆண்டு டானா ரஃபேல் (Dana Raphael) என்ற அமெரிக்க மானுடவியலாளர் இந்தச் சொல்லை முதன்முதலில் உருவாக்கினார்.

பிரசவத்திற்கு பிறகு 3 முதல் 5 ஆண்டுகள் வரை புதிய அம்மாக்கள் மனச்சோர்வுக்கும், பதற்றத்திற்கும் ஆளாகும் அபாயம் இருப்பதால் அவர்களுடைய சுய பராமரிப்புக்கும் (Self-care), தங்களது பழைய சுய ஆர்வங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். அத்துடன் தனக்கு எதிலும் ஈடுபாடு அல்லது ஆர்வம் இல்லை என்று நினைப்பதும், தான் யாருக்குமே தேவையில்லை போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருப்பதும் நீடித்தால் இதனை வெறும் அடையாள மாற்றத்தின் பகுதியாக மட்டுமல்லாமல் மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். இதுபோன்ற சூழலில் தகுந்த மனநல நிபுணரையோ அல்லது மருத்துவரையோ அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
உயிரியல் உலகை அதிரவைத்த AI: DNA-வில் ஒளிந்திருந்த புதிய ரகசியம்!
மேட்ரெசென்ஸ் - தாய்மைப் பருவம்

Reference:

logo
Kalki Online
kalkionline.com