
பெற்றோருக்கு ஆஸ்துமா இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் மூன்று முதல் ஆறு மடங்கு அதிகம் உள்ளது. இந்தப் பதிவில் ஆஸ்துமா நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய செயல்கள் பற்றி பார்ப்போம்.
ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய செயல்கள்:
1. புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் இரண்டாம் நிலை ஸ்மோக்கிங்:
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் முதலில் அதை கைவிட வேண்டும். புகைத்தல் ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யும். செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் என்பது சிகரெட் பிடிப்பவரின் அருகில் இருக்கும் போது, வெளிப்படும் புகையை சுவாசிப்பதைக் குறிக்கும். புகைத்தல் மற்றும் இரண்டாம் நிலை புகைத்தல் இரண்டும் ஆஸ்துமா அறிகுறிகளை கடுமையாக மோசமாக்கும். நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி இருதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவற்றில் செயற்கை நிறமூட்டிகள், அதிக அளவு உப்பு, பிரிசர்வேட்டிவ்ஸ் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதால் அவை ஆஸ்துமாவை அதிகரிக்கும்.
உலர்ந்த பழங்கள், ஒயின், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் போன்ற சல்ஃபைட் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உணர்திறன் உள்ளவர்களுக்கு ஆஸ்துமாவை அதிகரிக்கும்.
3. பால் பொருள்கள்:
பால் பொருள்கள், காரமான உணவு வகைகள், சோடியம் அல்லது எம்.எஸ்.ஜி அதிகம் உள்ள உணவுகள் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4. வறுத்து பொறித்த உணவுகள்:
வறுத்த கொழுப்பு நிறைந்த மற்றும் துரித உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆஸ்துமாவின் அளவை அவை அதிகரிக்கும்.
5. தூசி / மாசு:
தூசி, பூச்சிகள், பூஞ்சைகள், கரப்பான் பூச்சிகள், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் பொடுகு மற்றும் வீட்டுச் செடிகளின் மகரந்தம் ஆகியவையும் ஆஸ்துமாவின் அளவை அதிகரிக்கும். அதேபோல வாசனைத் திரவியங்கள் ஸ்ப்ரேக்கள், துப்புரவுப் பொருட்கள், காட்டமான ரூம்ஸ்ப்ரேக்கள் ஆகியவற்றிலிருந்து வரும் கடுமையான வாசனைகளைத் தவிர்க்கவும். சிலருக்கு கொசுவர்த்திச் சுருளின் புகையும் வாசனையும் ஒவ்வாமையை அதிகரிக்கும்.
6. புயல், காற்று மாசுபாடு:
புயல், காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். புயல் எழும்பியுள்ள சமயத்திலும் வெளியே செல்வதை செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். அதேபோல அறிகுறிகளை தூண்டக்கூடிய தீவிர வெப்பநிலை மாற்றங்கள், குளிர்ந்த காற்று மற்றும் அதிக ஈரப்பதம் போன்றவையும் ஆஸ்துமாவின் அளவை அதிகரிக்கக் கூடும். எனவே இவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
7. மருந்துகளை புறக்கணித்தல்:
ஆஸ்துமா நோயாளர்கள், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தவிர்க்கக்கூடாது. அதேபோல இன்ஹேலர் பயன்பாடுகளையும் தவிர்க்கக்கூடாது. மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
8. அதிகப்படியான உழைப்பு மற்றும் மன அழுத்தம்:
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல மன அழுத்தத்தை வளர விடக்கூடாது. நிர்வகிக்க முயற்சி செய்ய வேண்டும். இவையெல்லாம் ஆஸ்துமாவின் அறிகுறிகளை அதிகரிக்கும்.
9. மோசமான வீட்டு சுகாதாரம்:
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூசிப் பூச்சிகள், பூஞ்சை, குப்பைகள் போன்றவை இல்லாமல் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உறங்கும் படுக்கை, மெத்தை, தலையணை, தலையணை உறைகள், பொம்மைகள் போன்றவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆஸ்துமா உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் சுத்தமாக இருக்க வேண்டும். ஃபர் பொம்மைகள் தூசிகளை அதிகமாக தக்க வைத்துக் கொள்ளும். எனவே அவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தரக் கூடாது.
ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்கவும் மேலும் அதிகமாகாமல் தடுக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
மருத்துவர் சொல்லும் ஆஸ்துமா மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கமான பரிசோதனைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். போதுமான தூக்கம் இருக்க வேண்டும். மருத்துவர் அனுமதி பேரில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்க வேண்டும். இருமல் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.