நம்மில் பலர் பாகற்காய் என்றாலே, 'ஐயோ, கசக்கும்... வேண்டவே வேண்டாம்' என்பர். அதில் நிறைந்திருக்கும் நற்பயன்களை தெரிந்து கொண்டால் அப்புறம் அதை விடவே மாட்டார்கள். அதில் என்னென்ன பயன்கள் என்கிறீர்களா? தொடர்ந்து இந்தப் பதிவைப் படியுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளோடு அடிக்கடி ஒரு கிளாஸ் பாகற்காய் ஜூஸ் அருந்தி வந்தால் நோயின் தீவிரம் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.
ஈரலிலுள்ள நச்சுக்களை அகற்றி கல்லீரலுக்கு நன்மை தரக்கூடிய என்சைம்களின் அளவை அதிகரிக்கச் செய்யும் நற்பண்புகள் கொண்டது பாகற்காய். ஜீரண உறுப்பாகிய குடலுக்கும் சிறுநீர்ப் பைக்கும் அவற்றின் செயல்பாடுகளில் உறுதுணையாக பாகற்காய் இருக்கும்.
பாகற்காயிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து, நச்சுக்களை வெளியேற்றி இரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது.
சரும நோய்களை குணமாக்கி, சருமத்துக்கு மினுமினுப்பு அளிக்கவும் செய்கிறது. சருமத்தில் உண்டாகும் பரு, கறைகளை நீக்கி, நோய்த் தொற்றுகளையும் தடுக்கின்றன.
இதிலுள்ள வைட்டமின் C யானது, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதன் ஆன்டி வைரஸ் குணமானது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, குடல் இயக்கத்தையும் சீராக்கும்.
அதிகளவு நார்ச்சத்து கொண்ட காய் இது. இதில் குறைந்த அளவே கலோரி உள்ளது. அதிக அளவில் இருக்கும் கொழுப்பை எரித்து உடல் எடையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.
பித்த அமிலங்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து உடல் மெட்டபாலிஸம் சீராக நடைபெற உதவுகிறது. இந்தக் காயிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் A, C ஆகியவை முடியை மிருதுவாக்கி, முடியின் நுனி உடையாமலும், முடி கொட்டாமலும், பொடுகு இல்லாமலும் பாதுகாக்கின்றன.
இத்தனை நன்மைகளைக் கொண்டுள்ள பாகற்காயை உணவிலிருந்து நீக்கி விடாமல், சேர்த்து உண்டு உடல் நலம் பெறுவோம்.