வேப்பம் பூவில் இத்தனை மருத்துவ குணங்களா?

Medicinal properties of neem flower
Medicinal properties of neem flower
Published on

சித்திரை விஷு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று பெரும்பாலும் வேப்பம்பூ பச்சடி செய்யாத வீடே இருக்காது. வேப்பம்பூ பச்சடி கொஞ்சம் கசக்கிறது என்று முகம் சுளித்துக்கொண்டேதான் சாப்பிடுவோம். ஆனால் அந்த வேப்பம் பூவில் எத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றன தெரியுமா?

சித்திரை மாதம் பிறக்கப் போகிறது என்றாலே வேப்பம்பூ பூத்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும். அந்த மணமே நமக்குக் கோடை வெயிலை குளு குளுவென ஆக்கிவிடும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் இருக்கிறது.

வேப்ப மரத்திலிருந்து நேரடியாக பூக்களை பறித்தாலோ அல்லது தரையில் விழுந்திருக்கும் பூக்களாக இருந்தாலும் அதை உதறி சுத்தமான நீரில் கழுவி நிழலில்  உலர்த்தி காய விட வேண்டும். ஈரம் போக உலர்ந்ததும் அதை கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மாதம் ஒருமுறை லேசாக வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வேப்பம்பூவை சுத்தம் செய்து கல் உப்பு சேர்த்த மோரில் ஊறவிட்டு பிறகு எடுத்து வெயிலில் காயவைத்தும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இந்த வற்றலை குழம்பில் சேர்த்து சாப்பிடலாம். இதை வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை பருப்பு பொடி கலந்த சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. எனவேதான், வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிட கொடுக்கின்றனர்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வயிற்றுக் கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் வாயுக்களால் அவதிப்படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பம்பூ கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை கட்டுப்படுத்தும். குடலில் தங்கி உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவற்றுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பம்பூவை வெயிலில் காயவைத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு வேப்பம்பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். வேப்பம்பூவை வதக்கி அதனுடன் புளி, சீரகம், மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

இதையும் படியுங்கள்:
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மிளகாய்!
Medicinal properties of neem flower

ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூவை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அதனுடன் இரண்டு கடுக்காயையும் தட்டி போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்ய வேண்டும். இந்த தண்ணீரை காலையும் மாலையும் முக்கால் கப் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரைந்து விடும்.

வேப்பம்பூவை அரைத்து அதை பேஸ்ட் போலாக்கி சருமத்தில் தடவிக் கொண்டால் அது கொலாஜன் உற்பத்தியை தூண்டி சரும வறட்சியை குறைக்கும். ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ பொடியுடன் இரண்டு டீஸ்பூன் தயிரினை கலந்து அதை முகத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள  முகப்பருவை வேப்பம்பூவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் எளிதில் நீக்கிவிடும்.

ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ பவுடர், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக்கி அதை சருமத்தில் தேமல் போல் இருக்கும் இடத்தில் தடவி வர சீக்கிரம் குணமாகிவிடும். வேப்பம்பூ பொடியை தண்ணீரில் கலந்து அதை தலை முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை, பேன் தொல்லை அனைத்தும் நீங்கிவிடும். சித்திரை மாதத்தில் கிடைக்கும் வேப்பம்பூவை வீணாக்காமல் அதன் பயன்களை அறிந்து அதை பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தி பலன் பெறலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com