மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், புற்றுநோய் அதிகமாக பெண்களை தான் தாக்கும் என கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், உலகளவில் 185 நாடுகளில் உள்ள 30 வகையான புற்றுநோய்களின் தரவுகளை கொண்டு 2022 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியதில், வரும் காலங்களில் புற்றுநோய் ஆண்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு குறித்து, தேசிய புற்றுநோய் மையத்தின் இதழில் வெளியிட்ட தகவலில், 2022 ஆம் ஆண்டில் 10.3 மில்லியனாக இருந்த ஆண்களின் புற்றுநோய் பாதிப்புகள், 2050 ஆம் ஆண்டில் 19 மில்லியனாக உயரலாம் என்று கணிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இது கிட்டத்தட்ட 84% அதிகரிப்பாக கருதப்படுகிறது.
ஆண்களிடையே புற்றுநோய் இறப்புகள்:
ஆண்களிடையே புற்றுநோய் இறப்புகள் குறித்து அதில், 2022 ஆம் ஆண்டில் 5.4 மில்லியனாக இருந்த புற்றுநோய் இறப்புகள், 2050 ஆம் ஆண்டில் 10.5 மில்லியனாக அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கிட்டத்தட்ட 93% உயர்வாக கருதப்படுகிறது. மேலும் இந்த புற்றுநோய் இறப்புகள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களிடையே ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணம்?
பொதுவாகவே, தற்போதய காலக்கட்டத்தில், பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களிடையே புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருட்களின் பயன்பாடுகள் அதிகமாக இருப்பதுதான் புற்றுநோய்க்கு முக்கிய காரணாமாக அமைகிறது.
சிகரெட் பிடிப்பதன் மூலம் மட்டுமே நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய் தவிர, 16 வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்கள் நுரையீரல், வாய், வயிறு, பெருங்குடல் போன்ற பகுதிகளில் ஏற்படுபவதாக சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் இந்த ஆய்வின் மூலம் 2050 ஆம் ஆண்டிற்குள் ஆண்களிடையே புற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறியப்படுகிறது.
போதைப்பொருட்களால் அதிகளவு புற்றுநோய் ஏற்படலாம் என்பதால், போதைப்பொருள்களை தவிர்க்க வேண்டியது அவசியம். 'போதை ஒரு வெற்று பாதை' மட்டுமே என்பதை புரிந்துக் கொண்டு செயல்படுவது நல்லது.
‘ஆபத்தான பாதையில் செல்லாமல், ஆரோக்கியமான பாதையில் செல்வோம்’!