ஊசி போட்டுக் கொண்டால் தற்காலிக நோய் விலகும், ஊசி குத்திக் கொண்டால் நீண்ட நாள் நோய் நீங்கும்! இது என்ன புதிர்?
முதலாவதில் ஊசி மூலமாக நோயாளி உடலுக்குள் மருத்து செலுத்துவார்கள், அதாவது அலோபதி சிகிச்சை முறை; இரண்டாவதில் ஊசியேதான் மருந்து, அதாவது அகுபங்சர் மருத்துவம்! இது எப்படி இருக்கு?
அகுபஞ்சர் சிகிச்சை மூலம் பல நூறு நோயாளிகள் உடலுக்கும், அதனால் அவர்கள் மனசுக்கும் பெருத்த ஆறுதல் கிட்டி வருகிறது என்கிறது ஓர் ஆராய்ச்சி.
பொதுவாக உடல் உபாதைக்கு, உள்ளே மருந்து செலுத்தி அல்லது அருந்தி, தீர்வு காண்பது ஒரு சிகிச்சை முறை என்றால், புற உடலில், சக்தி ஓட்டப் பாதையில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசியைக் குத்தி, நிறுத்தி, அந்தப் புள்ளிகளை ஊக்குவித்து, உடல் நலத்தை சரிப்படுத்தி, நோயை சீராக்கும் அகுபங்சர் சிகிச்சையும் நற்பலன் அளிக்கக் கூடியது; தொடர்ந்த, நீடித்த, நிரந்தர தீர்வாகவும் செய்யவல்லது என்கிறார்கள்.
அகுபங்சர் ஓராண்டு மருத்துவப் படிப்பு, இந்தியாவில் பரவலாக கற்பிக்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் அவ்வாறு படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குத் தனித்தேர்வு நடத்தி, அம்மாநிலத்தில் மட்டுமே சிகிச்சை சேவை புரிய உரிமம் வழங்குகிறார்கள். தமிழகத்தில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இப்படிப்புத் திட்டம் இருக்கிறது. படிக்கும் காலத்திலேயே சிகிச்சை அளிக்கும் செய்முறை பயிற்சியும் தருகிறார்கள். தமிழ்நாட்டில் பட்டம் பெற்றவர்கள் மாநில அரசின் அங்கீகாரச் சான்றிதழ் பெற்று சிகிச்சை சேவையை மேற்கொள்ளலாம். தவிர, பாரத் சேவக் சமாஜ் என்ற மத்திய அரசு நிறுவனமும் இப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குகிறது.
மருந்தில்லா இந்த சிகிச்சை முறையை ‘குத்தூசி மருத்துவம்‘ என்றே சொல்லலாம். சிகிச்சையின்போது ‘சும்மா ஊசி குத்தும் வலி‘ என்பார்களே அப்படி, தாங்கக்கூடிய அளவே வலி இருக்கும், நீடித்த கடுப்பு வலி எதுவும் இருக்காது என்றும் தெளிவுபடுத்துகின்றனர் குத்தூசி மருத்துவர்கள்.
இந்த ஊசிகள் கிருமி நீக்கம் (ஸ்டெர்லைஸ்) செய்யப்பட்டவை, ஒரு நோயாளிக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடியவை. இந்த மருத்துவத்தின் பிரதான உபகரணமான ஊசிகள் சீன நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால், ஆரம்ப காலத்தில் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது இந்தியாவிலேயே தயாராகின்றன.
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் அவற்றை இந்தக் குத்தூசி மருத்துவத்தால் நேர் செய்துவிடலாம். நாள்பட்ட உபாதை என்றால் (என்ன வேடிக்கை பாருங்கள் இந்த இரண்டுமே ஆரம்பத்தில் வெறும் எச்சரிக்கை அறிகுறிகள்தான், நம் அலட்சியத்தால் நோய்களாக பதவி உயர்வு பெற்று விடுகின்றன!) அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள குத்தூசிகள் உதவுகின்றன.
ஆண், பெண் இரு பாலாருக்குமே உடலில் 14 சக்தி ஓட்டப் பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகளில் மொத்தம் 361 புள்ளிகள். இந்தப் புள்ளிகளில் சிலவற்றைத் தூண்டிவிடுவதன் மூலம்தான் உடலின் எந்த வகை நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது இல்லாமலேயே செய்துவிடவோ முடிகிறது. பெண்களின் கருப்பைக் கோளாறுகள் மற்றும் குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வளிக்கின்றன குத்தூசிகள்.
அலோபதி மருத்துவத்தில் சிகிச்சையை மேற்கொள்ளுமுன் நானாவித டெஸ்டுகளையும் செய்து கொண்டுவரச் சொல்கிறார்கள் இல்லையா, அதுபோல, குத்தூசி மருத்துவத்திலும் நாடி பார்த்தல் என்ற டெஸ்ட் உண்டு. ஆனால் இதற்காக தனியே பரிசோதனைக் கூடத்துக்கெல்லாம் போய் அலையவோ, டாக்டர் கமிஷன் உட்பட கூடுதல் கட்டணம் அழுதோ சிரமப்பட வேண்டாம். சிகிச்சை அளிக்கும் குத்தூசி மருத்துவரே அந்த டெஸ்டையும் செய்து விடுவார். அந்த அடிப்படையில் தகுந்த சிகிச்சை அளிப்பார்.
அகுபஞ்சர் மருத்துவத்தில் உடலின் எல்லாவகை நோய்களையும் தீர்க்க முடியுமாம். திடீரென்று ஏற்படக்கூடிய வலிகள் அவற்றைச் சார்ந்த நோய்கள், மற்றும் தலை, கை - கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து, முதுகு தண்டுவடம் என்று உடலின் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அதை குணப்படுத்துவதால், அந்த வலிக்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து, வலியின் பின்விளைவான நோயையும் நிவர்த்தி செய்துவிட முடியும் என்பதால், இந்த சிகிச்சை மிகவும் நம்பத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள்.
இந்த மருத்துவத்தில் ஊசியில்லாமலும் சிகிச்சை அளிக்கிறார்கள். இதற்குப் பெயர் – அகுபிரஷர். அதாவது சக்தி புள்ளிகளில் ஊசி குத்தாமல் நோயின் வீரியத்துக்கேற்ப மென்மையாகவோ, சற்றே கடினமாகவோ மருத்துவர் தன் விரல் நுனிகளால் அந்தப் புள்ளிகளை அழுத்தி விடும் முறை.
குத்தூசி சிகிச்சையால் நோயாளிக்குக் கிடைக்கும் பெரிய ஆறுதல்: பரிசோதனைக்கூட ஆய்வு மற்றும் மருந்து செலவு இல்லை, பக்க-பின் விளைவுகள் இல்லை. முக்கியமாக மனக் கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
பிறகென்ன, சந்தோஷம்தானே!