பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியானது முடிவுக்கு வரும் இறுதி நிலையை. 'மெனோபாஸ்' என்கிறோம். உடலில் ஆங்காங்கே ஏற்படும் ஹாட் ஃபிளாஷ், இரவில் வியர்ப்பது, தூக்கமின்மை போன்றவை மெனோபாஸ் நெருங்குவதைக் காட்டும் அறிகுறிகளில் சில. மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை, ‘இன்சோம்னியா’ என்பர். இது எல்லா பெண்களுக்கும் உரிய பொதுவான பிரச்னை.
தூக்கமின்மையால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற செயல்பாடுகளிலும் குறைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணும்போது இப்பிரச்னை தீர்ந்து, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீட் பத்ரா. மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றும்போது உண்டாகும் அசௌகரியங்கள் குறையவும் ஆரோக்கியமான தூக்கம் பெறவும் அவர் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பாதாம் மற்றும் முந்திரியிலுள்ள மக்னீசியம் சத்தானது உடலின் உயிரியல் கடிகாரத்தின் சர்க்காடியன் இசைவை ஒழுங்குபடுத்தி தூக்கத்தை வரவழைக்கக் கூடியது. மேலும், இது தசைகளை தளர்வுறச் செய்து அமைதி தருகிறது. எனவே பாதாம், முந்திரி, எள், இஞ்சி ஆகியவற்றை உட்கொண்டு தூக்கம் பெறலாம்.
பிஸ்தா மற்றும் ஃபிளாக்ஸ் சீட்களிலுள்ள வைட்டமின் E யானது இரவில் வியர்ப்பதையும், ஹாட் ஃபிளாஷ் வருவதையும் குறைக்க வல்லது. அதன் மூலம் தூக்கம் தடைபெறும் வாய்ப்பிருக்காது. சூரியகாந்தி விதை, தேங்காய், பாதாம், பிஸ்தா, ஃபிளாக்ஸ் சீட் ஆகியவற்றை உண்பது நன்மை தரும்.
மீன், கம்பு, கேழ்வரகு, பார்லி, சோளம் ஆகிய உணவுகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அமைதியான மனநிலை தந்து, இடையூறில்லாத தூக்கம் தரக்கூடியவை. இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
சோயா பொருட்களில் காணப்படும் இசோஃபிளவோன்கள் (Isoflavones) மற்றும் மிமிக் ஈஸ்ட்ரோஜென்களும் மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைத்து ஆழ்ந்த தூக்கம் பெற உதவி புரிபவை.
மெனோபாஸை சந்திக்கும் நிலையில் உள்ள பெண்கள் தினசரி மேற்கூறிய ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு டென்ஷன் இல்லாமல் அந்தக் காலக்கட்டத்தையும் கடந்து செல்லுங்கள்.