45+ பெண்களுக்கு... வெயிலை விட கொடுமையான 'ஹாட் பிளாஷஸ்': தப்பிப்பது எப்படி?

மெனோபாஸ் வயதில் ஏற்படும் திடீர் உடல் வெப்பம் மற்றும் வியர்வை தொல்லையிலிருந்து விடுபட, இல்லத்தரசிகள் உ
Hot Flashes
Hot FlashesAI Image
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, வாட்டி எடுக்கும் வெயில் ஒருபுறம், 'ஹாட் பிளாஷஸ்' தரும் தாக்கம் மறுபுறம் எனப் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். உடல் மற்றும் மன ரீதியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த ஹாட் பிளாஷஸ் தொல்லையிலிருந்து விடுபட உதவும் தீர்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

ஹாட் பிளாஷ் (Flash) மற்றும் ஹாட் பிளஷ் (Flush): என்ன வித்தியாசம்?

  • ஹாட் பிளாஷ்: இது உடலுக்குள் ஏற்படும் திடீர் வெப்ப அலை ஆகும். உள்ளுக்குள் ஒரு உலை கொதிப்பது போன்ற உணர்வை இது தரும்.

  • ஹாட் பிளஷ்: இது வெளியில் தெரியக்கூடிய மாற்றம். வெப்பத்தின் காரணமாக முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதி சிவந்து போவதை 'பிளஷ்' என்கிறோம்.

ஏன் ஏற்படுகிறது?

மாதவிடாய் முற்றிலும் நிற்கும் காலமான 'மெனோபாஸை' நெருங்கும் போது, உடலில் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோன் அளவு குறைகிறது. இதனால் மூளையில் உள்ள, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் பகுதி குழப்பமடைந்து, உடல் வெப்பத்தை வெளியேற்ற முயற்சிப்பதால் இது ஏற்படுகிறது.

விளைவுகள் மற்றும் அறிகுறிகள்: இரவு நேரங்களில் அதிகப்படியாக வியர்ப்பது, உடல் திடீரென வெப்பமடைவது, படபடப்பு கூடுவது, தோல் சிவந்து போதல் மற்றும் தூக்கமின்மை போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

தீர்வுகளும் தற்காப்பு முறைகளும்(hot-flashes-remedies)

1. உணவு முறை மாற்றம்

ஈஸ்ட்ரோஜன் நிறைந்த சோயா பொருட்கள், சோயா பால், ஆளி விதைகள் ஆகியவற்றில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜன் உள்ளது; இது ஹார்மோன் குறைபாட்டை ஈடுகட்ட உதவும். காரமான மசாலா உணவுகள், காபி, டீ போன்ற பானங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மோர், இளநீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.

2. வாழ்வியல் மாற்றங்கள்

இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்; தளர்வான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். வசிக்கும் அறையை எப்போதும் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரத்தில் ஜன்னல்களைத் திறந்து வைத்தோ அல்லது குளிர்சாதன வசதி உள்ள அறையிலோ உறங்கலாம். இது தூக்கத்தின் போது ஏற்படும் வியர்வையைக் குறைக்கும்.

3. மன அழுத்த மேலாண்மை

மன அழுத்தம் ஹாட் பிளாஷைத் தூண்டும் ஒரு முக்கியமான காரணியாகும். எனவே, தினமும் மூச்சுப்பயிற்சி செய்வது அவசியம். ஒரு நாளில் இரண்டு முறை, தலா 15 நிமிடங்கள் நிதானமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். யோகாசனத்தில் 'சவாசனம்' போன்ற தளர்வு தரும் ஆசனங்கள் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும்.

4. இயற்கை வைத்திய முறைகள்

  • வெந்தயம் மற்றும் சீரகம்: ஒரு ஸ்பூன் வெந்தயம் அல்லது சீரகத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரைக் குடிப்பது உடல் சூட்டைத் தணிக்க உதவும்.

  • மூலிகைத் தேநீர்: துளசி மற்றும் புதினா இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நரம்பு மண்டலத்தைக் குளிர்ச்சியடையச் செய்து வெப்ப அலையின் தீவிரத்தைக் குறைக்கும்.

  • குளிர்ந்த நீர்க் குளியல்: உறங்குவதற்குச் சற்று முன்பாக மிதமான குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையைக் குறைத்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

  • பருத்தி விரிப்புகள்: படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் செயற்கை இழை இன்றி தூய பருத்தியில் இருந்தால், அவை காற்றோட்டத்தை அதிகரித்து வியர்வையை எளிதில் உறிஞ்சும்.

இதையும் படியுங்கள்:
டாக்டரிடம் போவதற்கு முன் இதைச் செய்தீர்களா? மருந்தில்லா மருத்துவத்தின் ரகசியம்!
Hot Flashes

5. உடற்பயிற்சியின் பங்கு

மிதமான உடற்பயிற்சி ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும். தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, 'எண்டோர்பின்' (Endorphin) சுரப்பை ஊக்குவிக்கும். இது மனநிலையைச் சீராக வைத்து ஹாட் பிளாஷஸ் வருவதைக் குறைக்கும்.

முக்கிய குறிப்பு: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது இதற்கு நீண்ட காலத் தீர்வாக அமையும். ஒருவேளை பாதிப்பு மிக அதிகமாக இருந்தால், தயங்காமல் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com