மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நடக்கும் ஒரு செயல்முறை. இந்த காலகட்டத்தில் பெண்கள் சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். மாதவிடாயின்போது சுகாதாரத்தைப் பராமரிக்க பல விதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை மென்சுரல் கப் மற்றும் நாப்கின். ஆனால், பெரும்பாலான பெண்கள் நாக்கினைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு பொருட்களில் எது சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மென்சரல் கப் என்பது மாதவிடாய் காலத்தில் உடலுக்குள் வைக்கப்படும் ஒரு சுகாதாரப் பொருள். இது மென்மையான தீங்கு விளைவிக்காத சிலிக்கான் அல்லது ரப்பர் பொருளால் தயாரிக்கப்படுகிறது. மென்சுரல் கப் மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து, வெளியேறுவதைத் தடுக்கிறது.
நன்மைகள்: இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பொருள் என்பதால், பல ஆண்டுகள் பயன்படுத்தலாம். இதனால், நீண்ட காலத்திற்கு நாப்கின் வாங்கும் செலவைக் குறைக்கலாம். நாக்கினைப் போல மென்சுரல் கப்பை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது. மென்சுரல் கப் மாதவிடாய் ரத்தத்தை உடலுக்குள்ளேயே வைப்பதால், இதனால், ரத்தக் கசிவு ஏற்படும் அபாயம் குறைவு. இதன் மூலமாக நீச்சல், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளை எந்தத் தடையும் இல்லாமல் செய்யலாம். இது சருமத்துடன் நேரடி தொடர்பு கொள்ளாது என்பதால், சருமத்தில் எரிச்சல் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
தீமைகள்: மென்சுரல் கப்பை உடலில் சரியாக எவ்வாறு வைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள சிறிது நேரம் எடுக்கும். ஆரம்பத்தில் மென்சுரல் கப் பயன்படுத்துவது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். மென்சுரல் கப்பை சுத்தமாக பராமரிக்கவில்லை என்றால், தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
நாப்கின் என்பது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சுகாதாரப் பொருள். இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இது பெரும்பாலும் பருத்தி அல்லது செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. நாப்கின் மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சி வெளியேறுவதைத் தடுக்கிறது.
நன்மைகள்: நாப்கினை பயன்படுத்துவது மிகவும் எளிது. இது எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும். மேலும், இது பல்வேறு அளவுகள் மற்றும் வகைகளில் கிடைக்கின்றன.
தீமைகள்: நாப்கினை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும். இது சங்கடமாகவும், செலவு அதிகமாகவும் இருக்கும். நாப்கின் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருள் என்பதால், இது சுற்றுச்சூழல் குப்பை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். சில பெண்களுக்கு நாப்கின் பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். இதைப் பயன்படுத்தும் போது நீச்சல், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளைச் செய்வது கடினம்.
மென்சுரல் கப், நாப்கின் இரண்டிற்கும் தனித்தனி நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. இதில் எது சிறந்தது என்பது தனிநபரின் தேவைகள் மற்றும் வசதியைப் பொறுத்து மாறுபடும். ஆனால், நாக்கினை விட மென்சுரல் கப் சிறந்தது. இதைப் பயன்படுத்துவதற்கு பெண்கள் பழகிக்கொள்ள வேண்டும். இது குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.