பால் பாக்கெட் நிறங்களின் ரகசியம்: நீங்கள் வாங்கும் பால் உங்களுக்கு ஏற்றதுதானா?

Milk packet colour meaning
Milk packet colour meaningCredit: AI Image
Updated on

பால் பாக்கெட்கள் பல வண்ணங்களில் வருவதற்கு முக்கியக் காரணம், அதில் அடைக்கப்பட்டுள்ள பால் என்ன வகையான தரம் என்பதைக் குறிப்பதற்காகவே ஆகும். பாலில் கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் புரதம் எவ்வளவு உள்ளது என்பதை உணர்த்தவே இந்த வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பால் வாங்கும்போது பாலின் தரம் என்னவென்று கேட்டு அல்லது அதில் அச்சிடப்பட்டுள்ள விபரங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கொழுப்புச் சத்தைப் பொறுத்து, உரிய நிறம் உள்ள பாலை வாங்கிப் பயன்படுத்தலாம். இந்தப் பாலை அதிக நேரம் காய்ச்சவோ அல்லது மீண்டும் மீண்டும் சூடுபடுத்தவோ தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே பால் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சப்பட்டுப் பதப்படுத்தப்படுவதால், அதில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அதே நேரம், அதிக அளவில் பால் வாங்கிப் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தாமல், பாக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்குள் (Expiry Date) பயன்படுத்திவிட வேண்டும்; இல்லையெனில் அதிலுள்ள புரதச்சத்து அழிந்துவிடும்.

பாலைப் பதப்படுத்தும் முறைகள்:

பால் கொள்முதல் செய்யும் இடங்களில் முதலில் 'லாக்டோமீட்டர்' என்னும் கருவியைக் கொண்டு, அதில் கலந்துள்ள தண்ணீரின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதன் மூலம் பாலில் குறைந்திருக்கும் சத்துக்களையும் அதன் அளவையும் கண்டறிய முடியும். அதன்பின் பால் குளிரூட்டப்பட்டு, சுமார் 16 வகையான தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. பாலில் இருக்கும் கசடுகள் நீக்கப்பட்ட பிறகு, அது 4°C வெப்பநிலைக்கு மாற்றப்பட்டுப் பெரிய கொள்கலன்களில் சேமிக்கப்படுகிறது.

பின்னர் படிப்படியாக 'பிளேட் ஹீட் எக்ஸ்சேஞ்ச்' (Plate Heat Exchange) இயந்திரத்தின் மூலம் 76°C வெப்பநிலையில் 15 நொடிகள் சூடேற்றப்பட்டு, மீண்டும் 5°C வெப்பநிலைக்குக் குளிர்விக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது. இந்தப் பதப்படுத்தும் முறை சரியாக இருக்கிறதா என்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, கிருமிகள் முழுமையாக நீக்கப்படுகின்றன.

கொழுப்பை நீக்கும் முறை:

பாலைப் பதப்படுத்திய பிறகே அதில் இருக்கும் கொழுப்பைப் பிரிக்கிறார்கள். பொதுவாகப் பாலில் உள்ள கொழுப்பானது 20 முதல் 25 மைக்ரான் அளவு வரை இருக்கும். கொழுப்பு தனியாகப் பிரியாமல் பாலுடன் சீராகக் கலந்து விடுவதால், அது எளிதில் ஜீரணமாகும் தன்மையைப் பெறுகிறது. அதன் பின்னர் கொழுப்பின் அளவிற்கேற்ப பால் பிரிக்கப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால்தான் நீலம், பச்சை, ஆரஞ்சு மற்றும் பிங்க் எனப் பல்வேறு வண்ணங்களில்(different colour milk packet) பால் கிடைக்கிறது.

பால் வகைகளும் அதன் சத்துக்களும்:

  • பச்சை நிறப் பாக்கெட் (நிலைப்படுத்தப்பட்ட பால்): இதில் கொழுப்புச் சத்து சற்று அதிகம். 40 வயதுக்கு உட்பட்ட இளம் மற்றும் நடுத்தர வயதினர் இதைப் பயன்படுத்தலாம். 100 கிராம் பாலில் 4.5 கி கொழுப்பு, 3.2 கி புரதம், 4.7 கி கார்போஹைட்ரேட், 700 மி.கி தாது உப்புக்கள் மற்றும் 74 கலோரி ஆற்றல் உள்ளது.

  • ஆரஞ்சு நிறப் பாக்கெட் (முழுப்பால் / Full Cream Milk): இது கொழுப்புச் சத்து நிறைந்த பால். பெரும்பாலும் இனிப்புப் பண்டங்கள் செய்ய மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். அன்றாடப் பயன்பாட்டிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதைத் தவிர்ப்பது நல்லது. 100 கிராம் பாலில் 6 கி கொழுப்பு, 3.4 கி புரதம், 4.9 கி தாது உப்புக்கள் மற்றும் 904 கலோரி ஆற்றல் உள்ளது.

இதையும் படியுங்கள்:
Fast Food இனி 'Fast Good Food'! சுவையை இழக்காமல் ஆரோக்கியமாக மாறுவது எப்படி?
Milk packet colour meaning
  • நீல நிறப் பாக்கெட் (சமப்படுத்தப்பட்ட பால் / Toned Milk): இது 'நைஸ் பால்' என்று அழைக்கப்படுகிறது. எளிதில் ஜீரணமாகும் என்பதால் குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இது சிறந்தது. 100 கிராம் பாலில் 3 கி கொழுப்பு, 3.2 கி புரதம், 4.7 கி கார்போஹைட்ரேட், 700 மி.கி தாது உப்புக்கள் மற்றும் 60 கலோரி ஆற்றல் உள்ளது.

  • பிங்க் நிறப் பாக்கெட் (டபுள் டோன்ட் மில்க் / Double Toned Milk): உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இது ஏற்றது. இதில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. 100 கிராம் பாலில் 1.5 கி கொழுப்பு, 3.4 கி புரதம், 4.9 கி கார்போஹைட்ரேட், 740 மி.கி தாது உப்புக்கள் மற்றும் 484 கலோரி ஆற்றல் உள்ளது.

இனி கடைகளில் பால் வாங்கும்போது, உங்கள் உடல்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ற நிறமுள்ள பாலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com