
மனநிலை மாற்றம் (mood swings) என்பது ஒருவரின் உணர்வுகளில் ஏற்படும் திடீர் மற்றும் தீவிர மாற்றங்களை குறிக்கும். இது மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற உணர்வுகளிலிருந்து கோபம், எரிச்சல் மற்றும் சோகம் போன்ற உணர்வுகளுக்கு விரைவாக மாறுவதைக் (Mood Swings) குறிக்கும். குறிப்பாக மாதவிடாய், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) போன்ற நிலைகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மனநிலை மாற்றத்தை உண்டாக்கும்.
1) காரணங்கள்:
a) ஹார்மோன் மாற்றங்கள்:
மாதவிடாய் சுழற்சியின் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், மனநிலையை பாதிக்கும் மூளை ரசாயனங்களான செரோடோனின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
b) மன அழுத்தம் மற்றும் சோர்வு:
மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையை பாதித்து, மனநிலை மாற்றங்களை அதிகரிக்கலாம். அதிக ரத்தப்போக்கு காரணமாக ஏற்படும் ரத்த சோகை சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கும். இதுவும் மனநிலையை பாதிக்கலாம்.
c) பிற காரணிகள்:
வயது, உடல் எடை மாற்றங்கள் மற்றும் சில மருந்துகள் கூட மனநிலை மாற்றங்களுக்கு பங்களிக்கக் கூடும்.
2) அறிகுறிகள்:
மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், எரிச்சல் மற்றும் கோபம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு, உணவு பசி அல்லது சுவையில் மாற்றம், அழுகை மற்றும் சோகமான மனநிலையில் இருப்பது.
3) தீர்வுகள்:
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், வயிற்று வலி போன்றவற்றை சமாளிக்க போதுமான ஓய்வு, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மன அழுத்தத்தை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை அவசியம்.
a) ஆரோக்கியமான உணவு:
சமச்சீரான உணவு உண்பதும், போதுமான தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதும் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த காய்கறிகள், பருப்பு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
b) ஓய்வு மற்றும் தூக்கம்:
சரியான தூக்கம் மனநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். சோர்வாக உணரும் போது போதுமான அளவு ஓய்வெடுப்பதும், தூங்குவதும் மனநிலை மாற்றங்களைக் குறைக்க உதவும். அத்துடன் மிதமான உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வலியை ஓரளவு குறைக்க உதவும்.
c) மன அழுத்தத்தை குறைத்தல்:
மன அழுத்தம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். எனவே தியானம், யோகா அல்லது நமக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். அத்துடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் தேவைக்கேற்ப பேட்களை மாற்றுவதும் அவசியம்.
d) வயிற்று வலி மற்றும் தசை பிடிப்பிற்கு:
வயிற்றின் அல்லது முதுகின் மீது சூடான வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுப்பது தசைகளைத் தளர்த்தி வலியை போக்க உதவும்.
4) மருத்துவ ரீதியான அணுகுமுறைகள்:
மனநிலை மாற்றங்கள் நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு தீவிரமாக இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. மருத்துவர், அறிகுறிகளுக்கு ஏற்ப வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு பரிந்துரைப்பதுடன், மருந்துகள் அல்லது பிற சிகிச்சை முறைகளை பரிந்துரைக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)