மூக்குத்தி பூச்செடிக்குள் மறைந்திருக்கும் மருத்துவ மகத்துவங்கள்!
மூக்குத்தி பூச்செடி என்றால் பலருக்கும் தெரியாது. ‘தாத்தா தலை வெட்டிப் பூ’ என்றால் அனைவருக்கும் தெரியும். காரணம், இந்தப் பூவை வைத்து சிறு வயதில் அனைவரும் விளையாடி இருப்போம். இந்தச் செடிக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. பொடுதலைப் பூண்டு, முருகன் பச்சிலை, வெட்டுக்காய பூண்டு, இரண பூண்டு, கரும்பூடு, கிணற்றடி பூண்டு, தாத்தா தல வெட்டி என நிறைய பெயர்களில் இது அழைக்கப்படுவதுண்டு.
மூக்குத்தி பூச்செடி மஞ்சள், வெள்ளை மற்றும் ஊதா நிறம் என மூன்று விதமான நிறங்களில் பூக்கும் மூன்று வகையில் செடிகள் உள்ளன. இந்தச் செடியின் பூ, இலை, தண்டு, வேர் ஆகியவற்றை மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால், காய்கள் விஷத்தன்மை வாய்ந்தது என்று கூறப்படுவதால் அதனை மருத்துவத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரம் ஆறாது. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை சரி செய்யும் இந்த இலை. நீண்ட நாட்களாக ஆறாத புண் எதுவும் இருந்தால் அதன் மீது இதன் இலைகளை அரைத்துப் பூசி வர, விரைவில் புண் ஆறிவிடும்.
மூக்குத்தி பூச்செடியின் இலைகளை பறித்து நன்கு கழுவி மிளகு ரசத்தில் கடைசியாகப் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி அந்த ரசத்தை சூப்பு போல் வெறும் வயிற்றில் குடிக்க சளி பிரச்னை, தலைபாரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் போன்ற பிரச்னைக்கு சிறந்த மருந்தாகப் பயன்படும்.
நீண்ட நாட்களாக உடலில் உள்ள ஆறாத புண்ணிற்கு இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது நீர் விட்டு அரைத்து புண்ணின் மேல் தடவி வர விரைவில் ஆறிவிடும். வெட்டுக்காயம் அல்லது கீழே விழுந்து அடிபட்டு இரத்தம் வந்து கொண்டிருந்தால் இந்தச் செடியின் இலையைப் பறித்து உள்ளங்கைகளில் வைத்து நன்கு கசக்கி அதில் வரும் சாறை காயத்தின் மீது தடவ இரத்தம் உடனடியாக நின்று விடும்.
மூக்குத்திப்பூ செடியில் இருக்கும் வேர், பூ, இலை ஆகியவற்றை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். அதனை விழுதாக அரைத்து அந்த விழுதை முட்டியில் வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட, மூட்டு வலி சரியாகும்.
கிராமங்களில் பரவலாக தலை வெட்டிப்பூ என்று அழைக்கப்படும் மூக்குத்திப்பூ செடியின் இலைகளை அரைத்து அல்லது கையால் கசக்கி சாறு எடுத்து தேமல் உள்ள இடங்களில் தடவி வர விரைவில் சருமம் பழைய நிறத்திற்கு வந்து விடும்.
மூக்குத்தி பூச்செடியின் இலைகளை கைப்பிடி அளவு பறித்து நன்கு தண்ணீரில் அலம்பி சிறிது உப்பு சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். அதனை இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வயிற்றுப் பிரச்னை, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை சரியாகும்.