நம் உடல் முழுமையான ஆரோக்கியத்துடன் உள்ளது என்பதற்கான அறிகுறி நம்மால் அன்றாட வேலைகளை எந்தவித சிரமுமின்றி சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது என்பதுதான். வேலைகளை செய்வதற்கு உடலுக்கு சக்தி தேவை. சக்தி நாம் உண்ணும் உணவுகளிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் கிடைக்கிறது.
உணவுகள் நல்ல முறையில் செரிமானமாக இரைப்பை குடல் இயக்க ஆரோக்கியம் மிக முக்கியம். இரைப்பை குடல் சார்ந்த உறுப்புகள் கோளாறின்றி காலை முதலே செரிமான வேலைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பது நலம்.
நமது புத்தம் புது நாளை காபி அல்லது டீயுடன் தொடங்கினால் அவற்றிலுள்ள காஃபின் செரிமான பிரச்சினைகளை உண்டு பண்ணும். அதற்குப் பதிலாக வேறு என்னென்ன பானங்களை காலையில் அருந்தலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.
1. சீரகம்: குடலை சீராக வைத்திருக்க உதவுவதால் இதற்கு சீரகம் என்று பெயர். ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டுப் பின் இறக்கி வடிகட்டி அந்த நீரை அருந்தலாம். இது நல்ல செரிமானத்துக்கு உதவும்.
2.புதினா + கொத்தமல்லி சாறு: புத்தம் புதிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சமஅளவில் எடுத்து,கழுவி, அதை நீர் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.பின் வடிகட்டி அதிலிருந்து நீரைப் பிரித்தெடுக்கவும்.அந்த நீருடன் துருவிய இஞ்சி கால் டீஸ்பூன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்கலாம். இந்த பானம் குடல் கழிவுகளை வெளியேற்றி, குடல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.
3.மோர்: ப்ரோபயாடிக் பானங்களில் ஒன்றான மோரை வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோக்கியம் தரும். ஜீரணத்திற்கு உதவி செய்யும் நல்ல பாக்ட்டீரியாக்களின் வளர்ச்சிக்கு மோர் நன்மை புரிவதுடன் வயிற்றில் ஏற்படும் அசௌகரியங்களையும் சரி செய்ய உதவும். கெட்டி மோருடன் சிறிது உப்பு, கால் டீஸ்பூன் இஞ்சி துருவல் சிறிது பெருங்காயத் தூள், பச்சை கொத்தமல்லி இலைகள் சேர்த்து அருந்தலாம்.
4.வெந்தய நீர்: ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் வெந்தய விதைகளைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அருந்தலாம். இதிலிருந்து நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்களும் கிடைக்கும். இந்த பானம் மலச் சிக்கல் நீங்கவும் உதவும்.
5.இளநீர்: காலையில் தேங்காய் தண்ணீர் குடிப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பு பெற உதவும். இதிலுள்ள எலக்ட்ரோலைட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்பட உதவும்.
6.ஓம வாட்டர்: ஒரு டீஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கால் டீஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். தெளிவான நீரை வடிகட்டியெடுத்து அதனுடன் பொடித்த வெல்லத்தை தேவையான அளவு சேர்த்து வெது வெதுப் பாக அருந்தவும். இது சிறப்பான செரிமானத்துக்கு உதவும்.
7.சீரகம் + பெருஞ்சீரக வாட்டர்: அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்து, பின் வடிகட்டி நீரைப் பிரித்தெடுத்து அந்த நீரை அருந்தலாம். இது ஜீரணத்திற்கு சிறந்த முறையில் உதவுவதோடு மெட்டபாலிஸ ரேட்டையும் அதிகரிக்கச் செய்யும்.
8.இஞ்சி டீ: ஒரு கப் தண்ணீரில் இஞ்சி துண்டு, புதினா இலைகள், ஒரு துண்டு பட்டை ஆகியவற்றை நசுக்கிப் போட்டு, ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டு வைத்து மூடவும். ஐந்து நிமிடம் கழித்து டீயை வடிகட்டி எடுக்கவும். அதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.
9.கேரட் பாதாம் பால்: வளரிளம் பருவத்தில் இருக்கும் டீனேஜ் குழந்தைகள் காபி, டீ குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ளாமலிருக்க அவர்களுக்கு கேரட் பால் கொடுக்கலாம். பத்து பாதாம் பருப்புகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அவற்றை உரித்து, மிக்ஸியில் போட்டு உடன் ஒரு பெரிய வேக வைத்த கேரட்டை நறுக்கிப் போட்டு, பால் சர்க்கரை சேர்த்து அரைத்தெடுத்துக் குடிக்கக் கொடுக்கலாம்.