காலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுது கழுத்து வலி மற்றும் விறைப்பு (Stiffness) ஏற்படுவது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இதனால் நம்மால் அன்றாடப் பணிகளை சரியாக செய்ய முடியாமல் அவதிப்படுவோம். இதற்கு தவறான தூக்க நிலை, பொருத்தமற்ற தலையணை மற்றும் தசைப்பிடிப்பு போன்றவை முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனை அலட்சியப்படுத்தாமல் காரணத்தை அறிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
கழுத்து வலி மற்றும் விறைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
தவறான தூக்க நிலை (Sleeping Position):
குப்புறப்படுத்து தூங்குவது அல்லது கழுத்தை மிகவும் வளைத்த நிலையில் வைத்து தூங்குவது கழுத்து தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும். சரியான தலையணை உயரத்துடன் மல்லாந்து படுப்பது அல்லது ஒருக்களித்துப் படுப்பது சிறப்பு. தலையணை தோளுக்கும் தலைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும்.
பொருத்தமற்ற தலையணை:
மிகவும் உயரமான அல்லது மிகவும் மெலிதான தலையணையைப் பயன்படுத்துவதால் கழுத்து எலும்புகளின் சீரமைப்பு (Alignment) மாறி வலி மற்றும் விறைப்பு உண்டாகும். இரவு முழுவதும் கழுத்து முன்னோக்கி வளைந்து இருந்தால் தசைகளில் சிரமம் உண்டாகும். தலையணை சரியான அளவில் இல்லாமல் மிகவும் தட்டையாக இருந்தாலும் கழுத்துக்கான ஆதரவை இழக்கிறோம். பொதுவாக தலையணைகள் ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கும் திறனை இழந்து மேடு பள்ளமாக சீரற்றதாக இருக்கும். இதனைப் பயன்படுத்தும் போது கழுத்து வலி ஏற்படும். எனவே சரியான அளவில் உள்ள தலையணையை உபயோகிக்க வேண்டியது அவசியம்.
திடீர் இயக்கங்கள்:
தூக்கத்தில் திடீரென திரும்புவது, கழுத்தை திடுக்கிட்டு அசைப்பது அல்லது கைகளை தலைக்கு மேல் வைத்து தூங்குவதால் கழுத்து தசைகள் சுளுக்கிக் கொள்ள நேரிடும்.
பகல் நேர அசைவுகள் மற்றும் மன அழுத்தம்:
தவறான உடல் தோரணையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தொலைபேசியை காதுக்கும் தோளுக்கும் இடையில் பிடித்து கொண்டிருப்பது, தோளில் கனமான பையை சுமப்பது போன்ற செயல்களால் ஏற்படும் அழற்சி இரவு நேரத்தில் அதிகமாகி காலையில் கண் விழிக்கும் போது கழுத்து வலியை உண்டு பண்ணும். பகலில் நீண்ட நேரம் கணினி/மொபைலை குனிந்தபடியே பார்ப்பது மற்றும் மன அழுத்தம் காரணமாகக் கூட தசைகள் இறுக்கமடைந்து வலி ஏற்படும். அதிக மன அழுத்தம் இருக்கும் போது, தூக்கத்திலும் அறியாமல் உடல் தசைகள் குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் இறுகி காலையில் வலியாக வெளிப்படும்.
கழுத்து எலும்பு தேய்மானம்:
கழுத்தெலும்பு தேய்வு என்பது வயது காரணமாக கழுத்து முதுகெலும்புகள் மற்றும் வட்டுகளில் ஏற்படும் ஒரு வகை சிதைவு ஆகும். இது பொதுவாக வயதானவர்களிடம் காணப்படும். வயது முதிர்வு அல்லது தொடர் அழுத்தம் காரணமாக கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்தெலும்பு தேய்மானம் அடைவதால் நாள்பட்ட வலி மற்றும் காலையில் கடுமையான விறைப்புத் தன்மை உண்டாகும்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
சாதாரண கழுத்து வலி மற்றும் தசைப்பிடிப்பு போன்றவை சிறிது ஓய்வு எடுத்து எளிய பயிற்சிகளை மேற்கொள்ள 2 முதல் 3 நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அத்துடன் சில தூக்கப் பழக்கங்களை மாற்றிக் கொண்டாலும் காலை நேர கழுத்து வலி குணமாகிவிடும். ஆனால் சில அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கழுத்து வலியானது தோள்பட்டை, கைகள் அல்லது விரல்கள் வரை பரவுவது.
கைகளில் மரத்துப்போன உணர்வு (Numbness), ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது பலவீனம் ஏற்படுவது.
கழுத்து வலி மற்றும் விறைப்புடன் சேர்ந்து கடுமையான தலைவலி, காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் இருப்பது.
வலியின் காரணமாக தலை கிறுகிறுப்பு (Dizziness) அல்லது சமநிலையை இழப்பது போன்ற உணர்வு உண்டாவது.
எளிய பயிற்சிகள், வீட்டு வைத்தியமாக சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்தும் வலி குறையாமல் நீடித்தால்.
கீழே விழுந்ததாலோ அல்லது விபத்து ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின் இந்த கழுத்து வலி ஆரம்பித்தால்.
வலி 2 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நீடித்தால் அல்லது எந்த ஒரு வலியகற்றி மாத்திரைகளுக்கும் கட்டுப்படாமல் இருந்தாலும் மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.