வாய்ப்புண் என்பது அவ்வப்போது பலருக்கு ஏற்படும் ஒரு சாதாரண விஷயம்தான். இது சிறியதாகத் தொடங்கி சாப்பிடுவதிலும் பேசுவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியதாகலாம். இந்த வாய்ப்புண்கள் ஏன் வருகின்றன? அவற்றை தடுப்பதற்கான வழிகள் என்ன? என்பதைப் பற்றி பலருக்கு சரியாகத் தெரிவதில்லை. இந்தப் பதிவில் அடிக்கடி வாய்ப்புண் வருவதற்கான பல்வேறு காரணங்களை ஆராய்ந்து, அவற்றை தடுக்கவும், சிகிச்சை பெறவும் உதவும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள்:
வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் புஞ்சை தொற்றுகள் வாய்ப்புண்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும், விட்டமின் பி12, போலிக் அமிலம், இரும்பு போன்ற சத்து குறைபாடு இருந்தாலும் வாய்ப்புண் வரக்கூடும்.
மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து வாய்ப்புண்களை உண்டாக்கும். ரத்த அழுத்தம் மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் வாய்ப்புண்களை பக்கவிளைவாகக் கொடுக்கும்.
பற்களால் கடித்துக் கொள்வது, பிரஷ் செய்யும்போது காயம் ஏற்படுவது, சில உணவுகள், பேஸ்ட் அல்லது மவுத்வாஷ் ஆகியவற்றால் ஏற்படும் அலர்ஜி வாய்ப்புண்களை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால், வாய்ப்புண்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
வாய்ப்புண்களைத் தடுக்கும் வழிகள்:
தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்த்து வாயை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும்.
மன அழுத்தம் குறைவதற்கு தியானம், யோகா போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தலாம். மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். கூர்மையான பொருட்களை வாயில் வைப்பதைத் தவிர்த்து, வாயில் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
வாய்ப்புண் சிகிச்சை முறைகள்:
உங்களுக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் உப்பு நீர், ஆன்ட்டிசப்ட்டி சொல்யூஷன் போன்றவற்றால் வாயை கொப்பளிப்பது வலியை குறைக்க உதவும். வலியை குறைக்கும் மருந்துகள், வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் மற்றும் தொற்று நோயை எதிர்த்து போராடும் மருந்துகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். மிகக் கடுமையாக வாய்ப்புண்கள் இருந்தால், லேசர் சிகிச்சை செய்து அவற்றை சரி செய்ய முடியும்.
வாய்ப்புண்கள் ஏற்படுவது ஒரு சாதாரண விஷயம்தான் என்றாலும், அதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், வாய்ப்புண்களை குணப்படுத்தி மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். வாய்ப்புண்கள் நீண்ட காலமாக இருந்தால் அல்லது அடிக்கடி திரும்பத் திரும்ப வந்தால் உடனடியாக பல் மருத்துவர் அணுகுவது நல்லது.