
உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயக் கோளாறு, எலும்பு பலம் குறைதல், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்றவைகளால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் எலும்பு பலம் குறைதல் போன்ற பிரச்சினைகளால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன. சிலருக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. வயதானவர்களை கவனித்துக் கொள்வது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை கூட செய்யப்படுகிறது.
வயதானவர்களை பாதிக்கும் நோய்களில் 'அசைவு நோய்' அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூளை நரம்பியல் தொடர்பாக ஏற்படும் நோய்களில் நரம்பியல் அசைவு நோயும் ஒன்று. உலகம் முழுவதுமே அசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2023 நிலவரப்படி உலகில் 21.6 லட்சம் பார்கின்சன் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2033-ல் 30.15 லட்சமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை லட்சம் பேரில் 15 முதல் 42 பேருக்கு இந்நோய் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மூளையில் உள்ள நரம்புகளில் சிதைவு ஏற்படுவதால் இந்த நோய் வருகிறது. அதுமட்டுமல்லாமல், பக்கவாதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்நோய் நோய் வர வாய்ப்புள்ளது. குடும்ப வழி, தைராய்டு நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு நோய் பாதிப்பு வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள் நடுங்கிக்கொண்டே இருக்கும். தூக்கிப்போடுவது போல உணர்வார்கள்.
வளைந்து நிற்பது போன்ற தோற்றம் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு சமூகத்தில் மிகுந்த கூச்சம், அச்ச உணர்வுகளுக்கு ஆட்படுவார்கள். நோயின் தன்மையால் சமூகத்தில் தனக்கு அவச்சொல் ஏற்படுமோ என்று அச்சப்படுவார்கள். ஏனெனில், கை, கால்கள் நடுக்கம் இருந்துகொண்டே இருப்பதால் அதை பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணுவார்கள்.
உணவு சாப்பிடும்போது சிதறும். பொதுஇடத்தில் சாப்பிட யோசிப்பார்கள். முகத்தில் கலவையான எந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். இவை எல்லாமே நோயாளிகளுக்குக் கூடுதல் அழுத்தம் ஆகிவிடும்.
தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது இந்த நோயைக் குணப்படுத்த உதவும். இந்த நோய்க்கான மேம்பட்ட மருந்து, மாத்திரைகள் இன்று கிடைக்கின்றன. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சைகள், பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாகவே கிடைக்கின்றன. எனவே, இந்த நோய் வந்தால் வீடு, அலுவலகம், பொது இடங்களில் தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் தேவையில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது நம் அனைவருடைய கடமையாகும்.
இந்த நோய் நமக்கு வராமல் தவிர்க்கவும் முடியும். அதற்கு முறையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். மருந்து எடுத்து கொண்டால், அதை மருத்துவர்களின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைக்காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மரபணு வழியாகவும் நோய் வரலாம் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.