குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான உணவுப் பொருள் பிஸ்கட். ஆனால், இதில் உள்ள ஆரோக்கியத் தீமைகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. தினமும் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஊட்டச்சத்து குறைபாடு: பிஸ்கட்டில் பெரும்பாலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. ஆரோக்கியமான உணவுகளில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இவற்றில் இல்லாததால் குழந்தைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கவேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. மேலும், உடலுக்கு தேவையான வளர்ச்சி பிஸ்கட்டால் கிடைப்பது இல்லை.
எடை அதிகரிப்பு: அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ளடக்கம், அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இது உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும். இது டைப் 2 நீரிழிவு போன்ற நீண்ட கால உடல்நலப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.
பல் பிரச்னைகள்: பிஸ்கட்டில் உள்ள சர்க்கரை பல் சிதைவு மற்றும் துவாரங்களுக்குப் பங்களிக்கின்றன. குழந்தைகள் அவற்றை அடிக்கடி உட்கொள்ளும்போது வாய்வழி சுகாதாரம் கெட்டுப்போகிறது.
சர்க்கரை உணவுகளுக்கு அடிமையாதல்: அதிக சர்க்கரை கொண்ட தின்பண்டங்களை குழந்தைகள் இளம் வயதிலேயே உண்பதால் இனிப்புச் சுவைக்கு அடிமையாகிப் போகின்றனர். இது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை எடுத்துக்கொள்வதற்கு சவாலாகவே இருக்கும்.
அதிவேகத் தன்மை: பிஸ்கட்டில் உள்ள சர்க்கரை மற்றும் பிற சேர்க்கைகள் காரணமாக சில குழந்தைகள் அதிவேகத்தன்மை உள்ள இயல்பினராகவும் கவனக் குறைவாக நடந்துகொள்வதுமாக இருப்பார்கள். இது நடத்தை மற்றும் கவனத்தை பாதிக்கலாம். எனவே, பிஸ்கட்களை தினசரியோ அல்லது அடிக்கடியோ உட்கொள்வது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி: பிஸ்கட்டில் கோதுமை மாவு, சர்க்கரை, கிரீம் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. இவை பிஸ்கட்டில் வெப்பம் மற்றும் சர்க்கரை உள்ளடக்கத்தை அதிகமாக்குகின்றன. தினமும் அல்லது அடிக்கடி குழந்தைகள் பிஸ்கட்டை சாப்பிடும்போது மிக எளிதாக, உடல் பருமன் அதிகரித்து வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியுடன் காணப்படுவார்கள்.
சருமப் பிரச்னைகள்: பிஸ்கட்டில் உள்ள மாவுச்சத்து, கொழுப்பு சேர்க்கைகள் போன்றவை சருமத்தில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும். சருமத்தில் எரிச்சல், ஒவ்வாமை, சருமம் சிவத்தல், சுருக்கங்கள், விரைவிலேயே முதுமை அடைவது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
புற்றுநோயின் அபாயம் உற்பத்தி: செயல்பாட்டின்போது பிஸ்கட் அதிக வெப்பநிலையில் சுடப்படுகிறது. இதில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் அதிக வெப்பநிலையில் சுடும்போது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் உற்பத்தி ஆகின்றன. எனவே, இதை அடிக்கடி எடுத்துக்கொண்டால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்.
இரைப்பை குடல் நோய்கள்: பிஸ்கட்டில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இல்லாமல் இருக்கின்றன. எனவே, இது ஊட்டச்சத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். மேலும், இதில் உள்ள மாவுச்சத்து உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை நேரடியாக பாதிக்கிறது. இதனால் நாள்பட்ட இரைப்பைக் குடல் நோய்களைத் தூண்டுகிறது.
ட்ரான்ஸ் கொழுப்புகள்: சில பிஸ்கட்கள் ட்ரான்ஸ் கொழுப்புகளின் ஆதாரங்களாக இருக்கின்றன. அவை எல்.டி.எல் கொழுப்பை அதிகரித்து ஹெச்.டி.எல் கொழுப்பைக் குறைக்கின்றன. அதாவது நல்ல கொழுப்பைக் குறைத்து கெட்டக் கொழுப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் இதய நோய் வரும் அபாயம் உள்ளது.
செயற்கை சுவை மற்றும் வண்ணங்கள்: பல வணிக பிஸ்கட்டுகளில் செயற்கை சுவைகள் மற்றும் வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை எதிர்மறையான உடல்நல விளைவுகள் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளையும் ஏற்படுத்தலாம்.
எனவே, பிஸ்கட்டை எப்போதாவது அரிதாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், அடிக்கடி தருவது அவர்கள் உடல், மன ஆரோக்கியத்தை பாதிக்கவே செய்யும்.