

காளான்(Mushroom) எப்படி உருவாகிறது?
காளான் வித்துக்கள் ஈரமான, இருண்ட மற்றும் அழுகும் தாவரப் பொருட்களால் நிறைந்த மண்ணில் விழும் பொழுது, அவை மைசீலியம் எனப்படும் மெல்லிய பஞ்சு போன்ற இழைகளாக முளைக்கத் தொடங்குகின்றன. மைசீலியம் நன்கு வளர்ந்த பிறகு, அது காளான் போன்ற சிறிய மொட்டுக்களை உருவாக்குகின்றது. இந்த மொட்டுக்கள் இறுதியில் முழு காளான்களாக வளர்கின்றன.
காளான் சைவமா அசைவமா?
காளான் சைவமும் இல்லை அசைவமும் இல்லை. அது பூஞ்சை வகையைச் சேர்ந்தது. தாவரங்களைப் போல் தானாக உணவு தயாரிக்க இயலாது என்றாலும், காளான்கள் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. எனவே, இது சைவ உணவில் ஒரு பகுதியாகவே பலரால் கருதப்படுகிறது.
காளான்களின் வகைகள்:
காளான்களில் பல வகைகள் உள்ளன. பொதுவான உண்ணக்கூடிய காளான்களில் பட்டன் காளான், சிப்பி காளான், கிரெமினி மற்றும் ஷிடேக் போன்றவை உள்ளன. இவை தவிர நச்சுத்தன்மை வாயந்த காளான்கள் மற்றும் பல்வேறு சமையல் பயன்பாடுகளைக் கொண்ட சிறப்பு வகை காளான்களும் உண்டு.
காளானின் ஆரோக்கிய நன்மைகள்:
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது:
குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு, சோடியம் போன்றவை குறைவாக உள்ளன. ரிபோஃப்ளேவின், நியாசின், பாந்தோதெனிக் அமிலம் மற்றும் பி விட்டமின்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்திருக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
இதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ஆகியவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து சுத்திகரிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் தமனிகளில் அடைப்பை தடுக்க உதவுகிறது. இதனால் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
காளான்களைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
காளான்களில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மற்றும் பிற சேர்மங்கள் புற்றுநோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்பை கட்டுப்படுத்துகிறது:
சில காளான்களில் உள்ள லோவாஸ்டாடின் போன்ற சேர்மங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மன ஆரோக்கியம்:
காளான்கள் சிறந்த அறிவாற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்றும், மனநிலை கோளாறுகள் குறைவதற்கு பங்களிக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆற்றல் உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்க உதவும் பி வைட்டமின்களின் சிறந்த மூலமாகவும் திகழ்கிறது.
எடை இழப்பு:
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக புரதம் கொண்ட காளான்கள் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது
காளான்களில் இயற்கை இன்சுலின் மற்றும் என்சைம்கள் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் D பெறும் தாவர அடிப்படையிலான ஒரே ஆதாரங்களில் காளான்களும் ஒன்றாகும்.
காளான்கள் ப்ரீபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளன. இது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)