நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, படுக்கையில் விழுந்தவுடன் தூக்கம் வராமல் இருப்பதுதான். "ஏதாவது மருந்து சாப்பிட்டாலாவது தூக்கம் வருமா?" என்று ஏங்குபவர்களும் உண்டு. ஆனால், எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல், நம் காலில் அணியும் ஒரு ஜோடி 'சாக்ஸ்' நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் என்று சொன்னால் நம்புவீங்களா? கேட்கவே விசித்திரமா இருந்தாலும், இது உண்மை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
உங்களுக்கு ஏற்ற சாக்ஸ் வாங்க...
கால்களும் மூளையும் இணையும் புள்ளி!
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. சாதாரணமாகப் படுப்பவர்களை விட, காலில் சாக்ஸ் அணிந்து படுப்பவர்கள் மிக வேகமாகவும், நீண்ட நேரமும் தூங்குகிறார்களாம்.
இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் மிகவும் எளிமையானது. பொதுவாக நம் பாதங்கள் குளிர்ந்து போயிருந்தால், ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ஆனால், சாக்ஸ் அணியும்போது பாதங்கள் கதகதப்பாக மாறுகின்றன. இந்த வெப்பம், காலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது.
இதனால் ரத்த ஓட்டம் சீராகி, உடல் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்படுகிறது. "உடல் ரிலாக்ஸ் ஆகிவிட்டது, இனிமேல் தூங்கலாம்" என்ற சிக்னலை இது மூளைக்கு அனுப்புகிறது. இதனால் படுத்த சிறிது நேரத்திலேயே கண்கள் சொக்க ஆரம்பித்துவிடும்.
அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும்!
வெறும் தூக்கத்திற்கு மட்டுமல்ல, காலில் சாக்ஸ் அணிவது வேறு சில நன்மைகளையும் தருகிறது.
பலருக்குக் காலில் பித்த வெடிப்பு இருக்கும். இரவு தூங்கும் முன் கால்களைச் சுத்தமாகக் கழுவி, ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி, அதன் மேல் சாக்ஸ் அணிந்து படுத்தால், பாதம் வறண்டு போகாமல் இருக்கும். வெடிப்புகள் மறைந்து பாதம் மிருதுவாக மாறும்.
நாள் முழுவதும் நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்குக் கால் வலி இருக்கும். கதகதப்பான சாக்ஸ் அணிவது, அந்தத் தசை வலியைப் போக்கி, ஒருவித சுகமான உணர்வைத் தரும்.
கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
எப்போதும் துவைத்தா, சுத்தமான சாக்ஸை மட்டுமே இரவு தூங்கும்போது அணிய வேண்டும். அழுக்கு சாக்ஸ் அணிந்தால், அதில் உள்ள கிருமிகளால் பூஞ்சை தொற்று மற்றும் அரிப்பு ஏற்படும்.
நீங்கள் அணியும் சாக்ஸ் தளர்வாக இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமான எலாஸ்டிக் கொண்ட சாக்ஸ் அணிந்தால், அது ரத்த ஓட்டத்தைத் தடுத்து, கால்களை மரத்துப்போகச் செய்துவிடும்.
நைலான் அல்லது சிந்தெடிக் மெட்டீரியலைத் தவிர்த்துவிட்டு, மென்மையான பருத்தி சாக்ஸ் அணிவதே சிறந்தது. இது காற்றோட்டமாகவும், வியர்வையை உறிஞ்சும் தன்மையுடனும் இருக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், விலை உயர்ந்த சிகிச்சைகளைத் தேடிப் போவதற்கு முன்பு, இந்த எளிய வழியை முயற்சி செய்து பாருங்கள். இது செலவில்லாதது, பக்க விளைவுகள் இல்லாதது. இன்றிரவு படுக்கப் போகும்போது, கால்களைச் சுத்தம் செய்து, ஒரு மென்மையான சாக்ஸை அணிந்து பாருங்கள். நிச்சயம் ஒரு ஆழ்ந்த, அமைதியான உறக்கம் உங்களைத் தழுவும். நல்ல தூக்கம், நல்ல ஆரோக்கியத்தின் திறவுகோல்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
உங்களுக்கு ஏற்ற சாக்ஸ் வாங்க...