பலரும் கவனிக்காத தசை நோய்... ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் மட்டுமே தீர்வு!

உங்களை அச்சுறுத்தும் தசை அழற்சி நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முழுமையாக வெல்வது எப்படி?
Myositis | மயோசிடிஸ்
Myositis | மயோசிடிஸ்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மயோசிட்டிஸ் என்ற சொல்லுக்கு தசை அழற்சி என்று பொருள். இது ஒரு வகை மயோபதி ஆகும். இது எலும்புகளுடன் இணைக்கும் எலும்பு தசைகளை பாதிக்கும் நோய்களைக் குறிக்கிறது. உடலின் ஆரோக்கியமான தசைநார்களை தாக்கும் ஒரு அரிய வகை தன்னுடல் தாக்கு (Auto-immune Disease) நோயாகும். குழந்தைகள் உட்பட எந்த வயதிலும் இது ஏற்படலாம்.

மயோசிடிஸ் என்பது உடலின் தசைநார்களில் வீக்கத்தையும், பலவீனத்தையும் ஏற்படுத்தும் ஒரு அரிய தன்னுடல் தாக்க (autoimmune) நோயாகும். இதில் உடலின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான திசுக்களைத் தவறாக தாக்குகிறது. இதனால் கழுத்து, தோள்கள், இடுப்பு மற்றும் முதுகு போன்ற பெரிய தசைகளில் தீவிர பலவீனம் மற்றும் வலி ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

தோள்பட்டை, இடுப்பு, தொடைகள் மற்றும் கழுத்து தசைகளில் அதிக பலவீனம் காணப்படும். இதனால் நாற்காலியிலிருந்து எழுவது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற அன்றாட செயல்கள் செய்வதில் சிரமம் ஏற்படும்.

சிறிய உடற்பயிற்சி அல்லது செயல்பாட்டிற்கு பிறகும் அதிகப்படியான சோர்வு உண்டாகும். தொடர்ந்து நடக்கும் பொழுது அல்லது நிற்பதில் சிரமம் உண்டாகும்.

நிறம் மாறிய சிவப்பு அல்லது ஊதா நிற தடிப்புகள் கண்கள், முகம், கழுத்து, கைகளில் தோன்றும்.

தொண்டை மற்றும் உணவுக்குழாய் தசைகள் பாதிக்கப்படுவதால் உணவை விழுங்குவதிலோ, மூச்சு விடுவதிலோ சிரமம் ஏற்படும்.

தசைப்பிடிப்பு மற்றும் மூட்டுகளில் வலி உண்டாகும்.

வகைகள் மற்றும் அதற்கான முக்கிய அறிகுறிகள்:

Hives allergy
Hives allergy

டெர்மாடோமயோசிடிஸ் (Dermatomyositis):

தசை பலவீனத்துடன் சேர்த்து முகம், மார்பு மற்றும் மூட்டுகளில் ஊதா அல்லது சிவப்பு நிற சரும தடிப்புகள் (rashes) தோன்றும்.

பாலிமயோசிடிஸ் (Polymyositis):

சரும தடிப்புகள் இல்லாமல், உடலின் இருபுறமும் உள்ள தசைகளில் மெதுவாக அதிகரிக்கும் தசை பலவீனம் ஏற்படும். இதில் சரும பாதிப்புகள் இருக்காது.

இன்க்ளூஷன் பாடி மயோசிடிஸ் (Inclusion Body Myositis):

பொதுவாக முதியவர்களை பாதிக்கும் இது, கைகளில் பிடிமானம் குறைவது மற்றும் கால்களில் தசை பலவீனத்தை ஏற்படுத்தும்.

காரணங்கள்:

ஆட்டோ இம்யூன் கோளாறுகள்:

ருமட்டாய்டு ஆர்த்ரிட்டீஸ் அல்லது லூபஸ் போன்ற நிலைமைகளால் தசைகளில் வீக்கம் ஏற்படலாம்.

சுற்றுச்சூழல் காரணிகள்:

வைரஸ் காய்ச்சல், பாக்டீரியா அல்லது பாராசிடிக் தொற்றுகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் குழப்பி இந் நோய்க்கு காரணமாகலாம்.

மருந்துகளின் பக்க விளைவுகள்:

சில மருந்துகள் தசை வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

காயம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி போன்றவையும் காரணங்களாகலாம்.

நோய் கண்டறிதல்:

ரத்தப் பரிசோதனை, எம்ஆர்ஐ மற்றும் தசை திசு பரிசோதனை (Muscle Biopsy) மூலம் மயோசிடிஸ் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரத்தப் பரிசோதனையில் தசைகள் சேதமடையும் போது வெளியாகும் CPK (Creatine Phosphokinase) என்சைம் அளவு மற்றும் ஆட்டோ-ஆன்டிபாடிகள் சோதிக்கப்படும்.

MRI Scan தசைகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் கண்டறிய உதவுகிறது.

Electromyography - EMG தசைகளின் மின் செயல்பாட்டை அளவிட்டு பாதிப்பை அறியலாம்.

தசை பயப்ஸி - தசை திசுக்களின் ஒரு சிறிய பகுதியை எடுத்து ஆய்வுக்கூட சோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் இது எந்த வகையான மயோசிடிஸ் என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம்.

தீர்வுகள்:

பிசியோதெரபி: தசை சிதைவை தடுக்கவும், வலிமையை மீட்டெடுக்கவும் பிரத்யேக உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

வாழ்க்கை முறை மாற்றங்கள்: சரியான ஓய்வு, அதிக எடையைத் தூக்குவதை தவிர்த்தல் மற்றும் வலி நிவாரணிகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

மருந்துகள்: வீக்கத்தைக் குறைக்க கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இம்யூனோசப்ரஸன்ட் மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆரோக்கியமான உணவுமுறை: ஆர்கானிக் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சீரான, அழற்சி எதிர்ப்பு உணவை உட்கொள்வது வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கும்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com