தினசரி வாழ்வில் கை, கால்களில் சோர்வு நமக்கு பல நேரங்களில் ஏற்படும். சில வேளைகளில் அது உடலில் வலிகளாகப் புலப்படும். இது குளிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். இதற்குக் காரணம் நுரையீரல் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகள்தான் காரணம்.
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை நமது நுரையீரலில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. நுரையீரலில் உள்ள நச்சுக்களையும், அழுக்குகளையும் நீக்க சில இயற்கை முறைகளை நீங்கள் பின்பற்றலாம். நுரையீரல் பாதையை சுத்தமாக வைத்துக்கொள்வது சளி, இருமல், நிமோனியா காய்ச்சல் பாதிப்பை தடுக்கும். அதற்கு உதவும் சில எளிய வீட்டு குறிப்புகளை இந்தப் பதிவில் காணலாம்.
நுரையீரல் பாதையை சுத்தம் செய்ய இரண்டு சொட்டு நல்லெண்ணெயை ஒவ்வொரு நாசியிலும் ஊற்ற வேண்டும். இது நாசி பாதையை சுத்தம் செய்யும். இதை ஆயுர்வேதத்தில் ‘நாஸ்யம்’ என்கிறார்கள். புதினா இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால் நுரையீரல் பாதை சுத்தமாகும். பச்சை கற்பூரம், எலுமிச்சை தோல், யூகலிப்டஸ் ஆயில் கலந்தும் ஆவி பிடிக்கலாம். மஞ்சள், சுக்கு மற்றும் பட்டையை சம அளவு போட்டு காய்ச்சிய நீரை தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நுரையீரல் பாதை சுத்தமாகும்.
சளி, இருமல் தவிர்க்க உதவும் உணவுகள்: தேன், மஞ்சள், தயிர், புரதம் நிறைந்த உணவுகள், பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் தானியங்கள். சுத்தமான தேன் இருமலை நிறுத்தும், வலியை குணமாக்கும். சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டு இருக்கும் சளியை தேன் உடைக்கும். காற்று செல்லும் குழாய்களில் உள்ள வீக்கத்தை குறைக்கும். பேரிக்காய் நுரையீரலை தடையின்று செயல்பட உதவும். தொண்டை வறட்சியை குணப்படுத்தும். தொல்லை தரும் சளியை கரைக்க உதவும். இருமலைத் தடுக்கும்.
நுரையீரல் வலிமையாக இருக்க தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடிக்க வேண்டும். இஞ்சி நுரையீரலையும் காப்பாற்றும், இருமல், சளி, குமட்டல், அஜீரணத்தை குணமாக்கும். இஞ்சி-தேன் காம்பினேஷன் நுரையீரலில் உள்ள சளியை நீக்கும். உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும். அதே நேரத்தில் நுரையீரலுக்கும் நல்லது.
நிமோனியாவால் ஏற்படும் இருமலுக்கு மிளகு, வெந்தய தேநீர் ஆகியவை தொண்டைக்கு இதத்தைத் தந்து, நோய்த்தொற்றை அழிக்கும். சளியை உடைத்து நிமோனியாவால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும். வெந்தய விதைகளை வைத்து தயாரிக்கும் தேநீர் சளி, இருமலைக் குறைக்கும். நிமோனியாவால் மார்பில் சளி பிடித்துக்கொண்டால் இஞ்சி தேநீர் குடிக்கலாம். இதன் மூலம் நெஞ்சில் இருக்கும் சளி கரையும்.
நெஞ்சில் சளி சேராமல் தடுக்க வெள்ளை பூண்டை நசுக்கி நெஞ்சில் தடவலாம், அல்லது தினமும் ஒருமுறை பூண்டை அப்படியே சாப்பிடலாம். மூச்சுத் திணறலைக் குறைக்கவும், நெஞ்சிலிருந்து சளியை வெளியேற்றவும் மஞ்சள் உதவும். ஒரு கப் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகலாம். நல்லெண்ணெயுடன் மூன்று டேபிள் ஸ்பூன் கற்பூர எண்ணெய் கலந்து உறங்கும் முன் நெஞ்சில் தடவிக் கொள்ளலாம்.
கீரைகள், சிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி அதிகமுள்ள ஆப்பிள்கள் சுவாசப் பாதையை சுத்தமாக இருக்க உதவும். நுரையீரலில் வீக்கத்தை குறைக்கவும் ஆப்பிள் உதவும். தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் குடிக்கலாம். கமலா பழம், பெர்ரி பழங்கள், கிவி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கீரை, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் ஜூஸ் சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும்.