குழந்தை பேறு கிடைக்காமல் போவதற்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கிய காரணம், மாதவிலக்குக் கோளாறுகள், ஆண்களின் விந்தணு குறைபாடு. அந்தக் கோளாறுகள் நீங்கி, கருத்தரிப்பதற்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளன.
பாதாம் பருப்பு ஐந்தை அரை டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் ஊறவைத்த பாதாம் பருப்பின் மேல் இருக்கும் தோலை நீக்கிவிட்டு அதை ஒரு அரை டம்ளர் பாலில் 'கசகசா'யுடன் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அம்மியில் மை போல அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மேற்கூறிய கலவையை கலக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
மதியம் உணவில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். பின்பு இரவில் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழத்தை தின்று விட்டு பாலில் முருங்கைப்பூவை போட்டு காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வேண்டும். இப்படி ஆறு மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பிள்ளை பேறு இல்லாதவர்கள் பிள்ளை பேறு பெறுவார்கள்.
தாது பலம் குறைந்த ஆண்கள் அதனை பெருக்கி கொள்ள அடிக்கடி நெல்லிக்கனி, ஆல்பகோடா பழம், ஆப்பிள், கொய்யா, கடுக்காய் தூள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். நறுந்தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, அறுகீரை இவை ஐந்தும் தாது பலம் பெற உதவும் கீரைகள். இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து 48 நாட்கள் நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.
பால் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் இலவங்க தூள் கலந்து சாப்பிடலாம். இது தவிர சாலட், ஜூஸ், தயிர், காய்கறிகள் அல்லது சூப் ஆகியவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாகவோ அல்லது ஆற்றல் குறைந்தவராகவோ உணர்ந்தால், தொடர்ந்து இலவங்கம் எடுத்துக் கொள்ளலாம். ஆண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும்.
வாழைப் பூ, ஆல விழுது, துளசி, நெட்டிலிங்கத்தின் மெல்லிய இலை ஒன்றை சேர்த்து அரைத்து 21 நாட்கள் பெண்கள் சாப்பிட அவர்களின் கர்ப்பப்பை சுத்தமாகி மலட்டுத்தன்மை நீங்கும். அரை லிட்டர் பசும்பால், கால் கிலோ மலைப் பூண்டு, எடுத்து முதலில் பூண்டை உரித்து பாலில் போட்டு வேகவைத்து நன்கு சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து மாதவிலக்கான நாட்களிலிருந்து, ஒரு வாரத்துக்கு தினமும் காலை வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது நல்லது.
பசும் மஞ்சளை அரைத்து சாறு எடுத்து, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து கலந்து இதனை மாதவிலக்கான முதல் 3 நாட்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் இரண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
விந்தணுக்களை அதிகரிக்கவும், சீக்கிரம் குழந்தை வேண்டும் என்பவர்களும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டும். முருங்கைப்பூ-வை பாலில் காய்ச்சிய பிறகு அத்துடன் 2 பிஞ்ச் ஜாதிக்காய் பூ சேர்த்து தொடர்ந்து 48 நாள்கள் பருகி வர வேண்டும். இதன்பிறகு, செக் செய்து பார்த்தால் விந்தணுக்கள் அதிகரித்து இருக்கும்.
ஆலமரத்தில் இருக்கும் விழுது, பழம், கொழுந்து ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்துக் கொள்ளவும். அதனை இளைத்து பாலில் கலந்து பருகி வரலாம். அல்லது மூன்றையும் நன்கு காய வைத்து பொடியாக அரைத்து பாலில் போட்டு பருகி வரலாம். இதனை 48 நாள்கள் காலை மற்றும் இரவு பருகி வர வேண்டும்.
பெண்களின் கருப்பைக் கோளாறுகளை தவிர்க்க வாரம் இருமுறை நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவில் கலந்த எண்ணெய்யை உபயோகித்து இரவு உணவிற்கு பின் இரண்டு தோசை வார்த்து இஞ்சி சட்னியுடன் சாப்பிட வேண்டும். (இஞ்சி சட்னி எப்படி செய்வது? இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்த்து அரைத்து உபயோகித்து வருவது தான் இஞ்சி சட்னி.)
கருப்பை நீர்க் கட்டிகள் நீங்க நிழலில் காயவைத்த வெள்ளை அருகம்புல் பொடி 10 கிராம், கறிவேப்பிலை பொடி 10 கிராம் சேர்த்து அதனை தேங்காய்ப்பால் கலந்து தினமும் குடித்து வர நாளடைவில் சரியாகும். செம்பருத்திப்பூ 100 கிராம் அளவு எடுத்து 200 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டி ஆறிய பிறகு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை கட்டிகள் கரையும்.
கசகசா 1 டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி செய்து 1/4 டீஸ்பூனுக்கும் குறைவாகப் பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன், பனங்கற்கண்டு கலந்து குடித்தால் எளிதாக விந்து அடர்த்தி அதிகரிக்கும். இதன் மூலம் விரைப்புத் தன்மை பிரச்னையில் இருந்து மீண்டு வரலாம். இப்படி ஒரு 7 நாள்களுக்கு இரவில் குடிக்கும்போது, விந்து அடர்த்தி ஆவதை உணர முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)