
உணவே மருந்து என்று பழகிய நம் உணவு முறையில் ஒவ்வொரு உணவும் அதன் இடு பொருட்களும் உடல்நலத்தை மேம்படுத்தும் மருத்துவப் பண்புடையன. காபி, குழம்பு, களி எனப் பல உணவு பொருட்களிலும் பயன்படுத்தப்படும் சுக்கின் மேன்மை அன்று தொட்டு இன்று வரை உணரப்படுகின்றது.
சுக்கின் மேன்மை:
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியருக்கு மிஞ்சிய சாமியும் இல்லை என்ற பழமொழி சுக்கின் மேன்மையை உணர்த்தும். திரிகடுகம் என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மருந்தைப் போல் மூன்று முக்கிய கருத்துக்களை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கின்றது.
சிறுவர்களுக்குச் சுக்குப்பொடி:
நன்றாகக் காய்ந்த இஞ்சியைச் சுக்கு என்போம். அதிகாலை சுக்கு, கடும் பகல் மிளகு, இளமாலை திப்பிலி என்பதுபெரியோர் வாக்கு.. அதிகாலையில் கொஞ்சம் சுக்குப் பொடியை வாயில் போட்டு சுடு தண்ணீர் குடித்து விட்டால் நல்ல பசி எடுக்கும். உணவு சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்குச் சுக்குப் பொடியை தேனில் குழைத்து நாக்கில் தேய்க்கலாம். இது நல்ல மருந்து.
சுக்கு மல்லி காபி:
சுக்கு, வறமல்லி (தனியா), இரண்டையும் பொடியாக்கி கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி ஆற்றிக் குடிக்கும் பருகுநீர் சுக்கு மல்லி காபி எனப்படும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். நல்ல பசி எடுக்கும். உணவுக்கு பின்பு குடித்தால் சாப்பிட்ட உணவு விரைவில் செரிக்கும். பிரியாணி, நெய் பலகாரங்கள், எண்ணெயில் மூழ்க விட்டு பொரித்த உணவு பண்டங்கள் சாப்பிட்டவுடன் சுக்கு மல்லி காபி கொடுத்தால் வயிறு லேசாகி விடும்.
பெரியவர்களுக்குச் சுக்குக்குழம்பு:
நோய் தாக்கி சிகிச்சை மேற்கொண்ட சிலருக்கு சிகிச்சை முடிந்ததும் நாக்கில் சுவையின்றி உடல் சோர்ந்து இருப்பார்கள். இவர்களுக்குச் சுக்குக் குழம்பு வைத்து கொடுக்கலாம்.
சுக்குக் குழம்பு:
சுக்கு வாங்கி தோலைச் சீவி நன்றாக பொடித்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப் பொடியில் மஞ்சள் மல்லி, சீரகம் மிளகு சேர்த்து இடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி வைத்துக் கொண்டு வெந்தயம் தாளித்து, சிவந்ததும் சிறிய வெங்காயம் சேர்த்து குழம்புக் கலவையை ஊற்றி பச்சை வாசம் போனதும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி வைத்து சுடச் சுட சோறில் போட்டு சாப்பிடக் கொடுக்க வேண்டும். சுக்குக் குழம்பு தலையில் நீர் கோர்த்திருந்தால் ஜலதோஷம் பிடித்திருந்தால் அந்த நீரை இறக்கி விடும். குளிர்ச்சியான பிரதேசங்களில் இருப்பவர்கள் அடிக்கடி சுக்குக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம்
சுக்குக் களி:
பிள்ளை பெற்றவுடன் சுக்குக் களி கிண்டி கொண்டு போய் மருத்துவமனையில் சுட சுட இளம் தாய்மாருக்கு ஊட்டி விடுவார்கள். சுக்குக்களி கருப்பையைச் சுத்தமாக்கும், கழிவுகளை நீக்கும் என்பர். இப்பெண்கள் வீட்டுக்கு வந்ததும் மதியம் சுக்குக் குழம்பு வைத்து நல்லெண்ணெய் ஊற்றிச் சோற்றுடன் பிசைந்து சாப்பிடக் கொடுப்பதுண்டு. இதனால் உடல் தளர்ச்சி நீங்கும்.
சுக்கு சிறுவர், பெண்கள், பெரியவர் என அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. எனவே 'ஒரு சுக்கும் இல்லா' என்று இனி அலட்சியமாகச் சொல்லாதீர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)