
நம் உடலைக் குளிர்ச்சிப்படுத்த உடலின் உள்ளே இருந்து சருமத்தின் நுண்ணிய துவாரங்கள் வழியே வெளியேறும் திரவமே வியர்வை. அதிகளவு வியர்வை சுரப்பதை ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்கின்றனர். சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை வெளியேறுவது இயற்கை. இது எதுவுமின்றி சிலருக்கு அதிகமாக வியர்ப்பதற்கு, மன அழுத்தம், உணவு முறை மற்றும் மருந்துகளின் செயல்பாடு ஆகியவற்றை காரணமாகக் கூறுகின்றனர். நம் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும், சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலமும் வியர்வை சுரப்பை கட்டுக்குள் வைக்க முடியும். அது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. நாம் அணியும் ஆடைகள் இறுக்கமில்லாமல், உடலை காற்றோட்டமாக வைத்திருக்க உதவுவதாக இருப்பது நல்லது. இதற்கு காட்டன் அல்லது லினென் போன்றவற்றால் தயாரிக்கப்படும் ஆடைகள் சிறந்தது.
உஷ்ணத்தையும் வியர்வையையும் உடலில் தேங்கி நிற்கச் செய்யும் பாலியஸ்டர் போன்ற சிந்தெட்டிக் இழைகளாலான ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டியவை.
2.அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணம் ஏறாமல் சமநிலையில் இருக்க உதவும். உடலில் நீர்ச்சத்து நிறைந்திருக்கும்போது வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
சிறந்த செரிமானம், ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச, நச்சுக்களை நீக்க என பல வகையான செயல்பாடுகளுக்கும் தண்ணீர் நல்லமுறையில் உதவி புரியும்.
3. வியர்வை சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கக் கூடிய ஸ்பைசியான உணவுகள், காபி மற்றும் ஆல்ஹகால் போன்றவற்றை தவிர்ப்பது நலம்.
உடல் உஷ்ணத்தைக் குறைத்து, உடலை குளிர்விக்க உதவும் வெள்ளரிக்காய், வாட்டர் மெலன், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்வது வியர்வையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
4. அதிகளவு வியர்வை சுரப்பதற்கு மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகளும் காரணிகளாகின்றன. ஆகையால், மெடிட்டேஷன், மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் தினசரி உடற்பயிற்சி போன்றவைகளை தவறாமல் கடைப்பிடித்து மன ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்துக் கொள்வது அவசியம்.
5. ஆன்டி பாக்ட்டீரியல் சோப் உபயோகித்து தினசரி சுத்தமான நீரில் குளித்து, உடலை ஈரமின்றி துடைத்து வைப்பது, சருமத்தை ஃபிரஷ்ஷாக வைக்கவும்,பாக்ட்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும். மேலும் உடல் துர்நாற்றத்தையும் நீக்கும்.
வீட்டு சிகிச்சை முறைகள்:
நீர்த்த (Diluted) ஆப்பிள் சிடார் வினிகரை அதிக வியர்வை வெளியேறும் அக்குள் போன்ற இடங்களில் இரவில் தடவி காலையில் கழுவி விடலாம். இதன் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் துவாரங்களை சுருங்கச் செய்யும் குணங்கள் வியர்வை மற்றும் துர்நாற்றம் குறைய உதவும்.
பேக்கிங் சோடா மற்றும் கார்ன் ஸ்டார்ச் பவுடர் இரண்டையும் சம அளவில் கலந்து அக்குள் மற்றும் பாதங்களில் தூவலாம். இது ஈரத்தை உறிஞ்சி நாள் முழுக்க வியர்வை நாற்றம் இல்லாமல் உடலைப் பாதுகாக்கும்.
சதகுப்பை (Sage) டீ அருந்துவது அல்லது குளிர்ந்த சேஜ் டீயில் கை மற்றும் பாதங்களை முக்கி எடுப்பது வியர்வை சுரப்பைக் குறைக்க உதவும்.
தேங்காய் எண்ணெயை உடலில் தடவி வைப்பதும் உடல் துர்நாற்றம் குறைய உதவும்.
லெமன் ஜூஸை உடலில் தடவிக் கொண்டால் அதன் அமிலத் தன்மை சருமத் துவாரங்களை சுருங்கச் செய்து வியர்வை சுரப்பைக் குறைக்க உதவும்.
இவை அனைத்திற்குப் பின்னும் பிரச்னை தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.