
கோடை காலத்தில் பலருக்கும் வியர்வைத் சரும அழற்சி ஏற்படும். இது சருமத்தில் தேங்கி நிற்கும் வியர்வையால் ஏற்படுவதாகும். நீண்ட நேரம் சருமத்தின் மீது வியர்வை நீடித்திருக்கும் போது எரிச்சல் ஊட்டும் சரும அழற்சி ஏற்படுகிறது. பொதுவாக சிறிய புடைப்புகள் அல்லது கொப்புளங்கள் போல சருமத்தின் மேல்புறத்தில் தோன்றி, முட்கள் குத்துவது போன்ற எரிச்சலை உண்டாக்கும். இதற்கான காரணங்களையும் தடுப்பு முறைகளையும் பார்க்கலாம்.
வியர்வைத் சரும அழற்சி ஏற்பட காரணங்கள்:
1. காலநிலை:
வெப்பமான காலநிலையில் அதிகமாக வியர்க்கும். குறிப்பாக, ஏப்ரல், மே போன்ற கடுமையான வெப்பமான மாதங்களில் பலருக்கும் வியர்வை சரும அழற்சி ஏற்படும்.
2. வியர்வையைத் தக்க வைத்தல்:
வியர்க்கும் போது அது உடலில் நீண்ட நேரம் நீடித்திருப்பதால் சரும அழற்சி ஏற்படுகிறது. இறுக்கிப் பிடிக்கக்கூடிய இறுக்கமான ஆடைகள் வியர்வையை தக்க வைக்கின்றன.
3. உராய்வு:
அணியும் ஆடைகளால் ஏற்படும் உராய்வு சரும பகுதிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால் வியர்வை சரும அழற்சி ஏற்படுகிறது.
4. வியர்வைக் கரைசல்கள்:
வியர்வையில் இருந்து ஆவியாகும் நீரினால் ஏற்படும் வியர்வைக் கரைசல்களின் செறிவு சருமத்தை எரிச்சல் அடைய செய்யும். இந்த வியர்வை சரும அழற்சி முதுகு, அக்குள் மற்றும் உள் வெளிப்பகுதிகளில் ஏற்படும்.
சிகிச்சை முறையும் தடுப்பு முறைகளும்:
1. வியர்வையை குறைத்தல்:
வியர்வைத் சரும அழற்சியை கட்டுப்படுத்துவதில் வியர்வை சுரப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
2. ஆடைத் தேர்வு:
வியர்வையை உறிஞ்சக்கூடிய வகையில் வெயிலுக்கு இதம் தரும் பருத்தி ஆடைகளை அணிவது மிக அவசியம். இதனால் வியர்வை சரும அழற்சி வராமல் பாதுகாக்கலாம். செயற்கை இழைகளாலான ஆடைகளை தவிர்க்க வேண்டும். அவை வியர்வையை தக்க வைத்து சருமத்தை எரிச்சலடைய செய்து நிலைமையை மோசமாக்கும்.
3. சரும பராமரிப்பு:
சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதும் எரிச்சல் ஊட்டும் பொருள்களை தவிர்ப்பதும் அழற்சியில் இருந்து பாதுகாக்கும்.
4. குளிர்ந்த குளியல்:
சருமத்தை குளிர்விக்க குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் அவசியம். இது வியர்வை சரும அழற்சியின் அறிகுறிகளைப் போக்க உதவும். ஷவரின் கீழ் நின்று குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்து அது குளிர்ந்ததும் கோப்பையில் தண்ணீரை எடுத்து மெதுவாக நிதானமாக ஊற்றிக் குளிக்க வேண்டும்.
5. சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்திருப்பது:
இது வியர்வையை குறைத்து எரிச்சலையும் தடுக்கும். ஏசி அல்லது மின்விசிறியின் கீழ் இருக்கலாம்.
6. கேலமைன் லோஷன்:
இது அரிப்பு மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். எரிச்சல் ஊட்டும் சருமத்திற்கு இதமாக இருக்கும்.
7. வாசனையற்ற டால்கம் பவுடர்:
வியர்வையை உறிஞ்சுவதுடன் துளைகளின் அடைப்பை தடுக்கவும் எரிச்சலை குறைக்கவும் உதவும்.
8. நீரேற்றம்:
சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அதிகப்படியான வியர்வையை தடுக்கவும் தினமும் அவரவர் உடல் எடைக்கு தகுந்த மாதிரி நீர் அருந்த வேண்டியது அவசியம்.
9. எரிச்சலூட்டும் பொருட்களைத் தவிர்த்தல்:
மிகவும் ஹெவியான வாசனை திரவியப் பொருட்கள் கடுமையான சோப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கு மென்மையான சோப்புகளை உபயோகிக்க வேண்டும். மிக மெல்லிய வாசனை தரும் பர்ஃப்யூம்களை உபயோகிக்க வேண்டும்.
வியர்வை சரும அழற்சியின் அறிகுறிகள் மோசமாக இருந்தால் நிபுணரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.