அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த, 'எம்டி ஆண்டர்சன் கேன்சர் சென்டர்' நடத்திய ஆய்வில், நேவி பீன்ஸை சாப்பிடுவதன் மூலம் உடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் பயன் அடைவதாகவும், இதனால் புற்றுநோய் தடுக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
குடல் புற்றுநோய், உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த 48 ஆண், பெண் நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களுக்கு 16 வாரங்கள் தொடர்ந்து ஒரு குவளை 'நேவி பீன்ஸ்' கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.
இந்த நேவி பீன்ஸில் அதிக அளவில் அமினோ அமிலங்களும் நார்ச்சத்தும் இருக்கின்றன. இதைத் தொடர்ச்சியாக உண்ட பின்பு ஆய்வுக்கு உட்படுத்திய நோயாளிகளின் இரத்த மாதிரிகளை சோதித்ததில், அதில் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் அளவு குடலில் குறைந்து இருப்பதும், நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களான, 'ஃபேசலி பாக்டீரியம், யு பாக்டீரியம், பைபோடோ பாக்டீரியா' ஆகியவை அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
அடுத்தகட்ட ஆய்வில், நோயாளிகளுக்கு பீன்ஸ் கொடுப்பதை நிறுத்திய நான்கே வாரங்களில் அவர்களின் குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் கண்டனர். அதேநேரம், தீமை செய்யும் பாக்டீரியாவும் உடலில் அதிகரித்தன. இந்த பாக்டீரியாக்கள் எப்போதெல்லாம் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலு குன்றி இருக்கிறதோ, அப்போதெல்லாம் உடல் உறுப்புகளைத் தாக்கி புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
இதன் வாயிலாக, புற்று நோய் வராமல் தடுப்பதற்கும், புற்று நோய் வந்தவர்களுக்கு அதனுடைய தீவிரம் அதிகரிக்காமல் இருப்பதற்கும் 'நேவி பீன்ஸ்' உதவிகரமாக இருக்கிறது என்பது, 'எம்டி ஆண்டர்சன் கேன்சர் சென்டர்' விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.