பல் டாக்டருக்கே இனி வேலை இல்லை... வாரத்தில் ஒருநாள் இதைச் செய்தாலே போதும்!

Neem Brush
Neem Brush
Published on

இன்றைய காலக்கட்டத்தில் நாம் எல்லோரும் கலர் கலரான டூத் பிரஷ்களையும், விதவிதமான சுவைகளில் வரும் பற்பசைகளையும் நம்பித்தான் இருக்கிறோம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் தாத்தா, பாட்டி காலத்தில் இதெல்லாம் இல்லவே இல்லை. ஆனாலும், அவர்களுக்குத் தொண்ணூறு வயது ஆனாலும் பற்கள் ஆணி அடித்தது போல அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்ததே, எப்படி? அதன் ரகசியம் வேறொன்றும் இல்லை, நம் வீட்டு வாசலில் நிற்கும் வேப்பமரம் தான்.

நம்மில் பலருக்கு வேப்பங்குச்சி என்றால் வெறும் கசப்பு மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால், நவீன அறிவியலே வியக்கும் அளவுக்கு அதில் மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வேம்பில் 'அசாடிராச்டின்' (Azadirachtin) என்ற ஒரு அற்புதமான வேதிப்பொருள் இருக்கிறது. இது சாதாரணமாக இல்லை; வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களுக்கும், கிருமிகளுக்கும் இது ஒரு எமன் என்றே சொல்லலாம். நாம் கடையில் வாங்கும் விலை உயர்ந்த மவுத் வாஷ்கள் செய்யும் வேலையை, இந்த ஒரு குச்சி பைசா செலவில்லாமல் செய்துவிடும்.

ஈறுகளுக்குப் பாதுகாப்பு!

இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை ஈறு வீக்கம் மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிவது. இதற்கு வேப்பங்குச்சி ஒரு சிறந்த தீர்வு. வேப்பஞ்சாறு ஈறுகளில் படும்போது, அது ஈறுகளை இறுக்கமடையச் செய்து, பலப்படுத்துகிறது. ஆடிக்கொண்டிருக்கும் பல்லைக் கூடக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் சக்தியை ஈறுகளுக்கு இது வழங்குகிறது.

பற்களை வெண்மையாக்கும்!

காபி, டீ குடித்துக் குடித்துப் பற்கள் மஞ்சளாகிவிட்டதா? "பற்கள் வெள்ளையாக மாற வேண்டுமா?" என்று விளம்பரம் செய்யும் கெமிக்கல் பேஸ்ட்களைத் தேடி ஓடாதீர்கள். வேப்பங்குச்சியில் இருக்கும் இயற்கையான தாதுக்கள், பற்களின் மீது படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையைச் சுரண்டி எடுத்துவிடும். வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து இதைச் செய்து வந்தால், பற்கள் இயற்கையாகவே பளிச்சென்று மின்ன ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
தூக்கத்தில் சிலருக்கு வாய் திறந்தபடியே இருப்பதற்கான காரணம் தெரியுமா?
Neem Brush

வாய் துர்நாற்றத்திற்கு 'குட்-பை'!

சிலரிடம் பேசும்போது வாய் துர்நாற்றம் வீசுவதை கவனித்திருப்போம். இது அவர்களுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுக்கும். வாயில் தங்கியிருக்கும் உணவுத் துகள்களை பாக்டீரியாக்கள் சிதைக்கும்போதுதான் இந்த நாற்றம் உண்டாகிறது. வேப்பங்குச்சியின் அந்தத் துாக்கல் கசப்புச் சுவை, நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, வாய்க்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. எந்த மின்ட் மிட்டாயும் செய்யாத வேலையை வேம்பு செய்துவிடும்.

எப்படிப் பயன்படுத்துவது?

"எனக்கு தினமும் குச்சியில் பல் விளக்க நேரமில்லை" என்று சொல்பவர்கள் கவலைப்பட வேண்டாம். தினமும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமாவது இதைச் செய்யுங்கள். ஒரு சிறிய வேப்பங்குச்சியை உடைத்து, அதன் நுனியை நன்றாகப் பற்களால் கடித்து மெல்லுங்கள். அது நார் நாராகப் பிரிந்து, ஒரு பிரஷ் போல மாறும். அதை வைத்துப் பற்களின் இடுக்குகள், ஈறுகள் என எல்லா இடங்களிலும் நிதானமாகத் தேயுங்கள். அந்தச் சாறு வாயில் படுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
பியூட்டி சலூன் செலவு மிச்சம்! வீட்டிலேயே Nail Art செய்ய எளிய வழிகள்!
Neem Brush

ஆயிரக்கணக்கில் செலவு செய்து பல் மருத்துவரிடம் போவதை விட, இயற்கையின் கொடையான இந்த வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவது எவ்வளவோ சிறந்தது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com