
காலையில் நம் உற்சாகமே ஒரு கப் காபியில்தான் உள்ளது இந்த காபி நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளில் பாதிப்பை ஏற்படுத்துமாம்... அது எப்படி என்று பார்ப்போம்.
ஜலதோஷம் மற்றுப் ஃப்ளூ மருந்துகள்
காபி சாப்பிடுவது நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் . ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ பாதிப்பின் போது எடுக்கும் மருந்துகளில் சுடாஃபெட் என்ற பொருளும் நம்மை ஊக்குவிக்கும். இரண்டும் சேர்ந்து அதிகமாவதால் தலைவலி, படபடப்பு மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
தைராய்டு மருந்து
தைராய்டு மாத்திரைக்கு பின் காபி அருந்துவதால் அதன் உறிஞ்சும் சக்தி 50 சதவீதம் குறைவதாக அறியப்படுகிறது. இப்படி குறைவதால் சோர்வு மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படலாம்.
மனச் சோர்விற்கான மருந்துகள்
மனச்சோர்வு மற்றும் மனப்பதட்டத்திற்காகக் கொடுக்க படும் மருந்துகளுடன் காபி சேர்ந்தால் அந்த மருந்துகளின் வீர்யத்தைக் குறைத்துவிடும். இதனால் நோயிலிருந்து மீள்வது தாமதமாகும்.
வலி நிவாரணிகள்
வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளும் போது காபி உட்கொண்டால் வயிற்றில் பிரச்னைகள் ஏற்படும் என்று அறியப்படுகிறது. வலி நிவாரணிகளிலும் காஃபின் உள்ளதால் அதிகமாகி வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாக வாய்ப்புண்டு.
இதய பிரச்னை மருந்துகள்
காபி அருந்துவதால் தாற்காலிகமாக இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பும் சிறிது அதிகமாகும். இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்க்காக மருந்து எடுப்பவர்களுக்கு இது பிரச்னையை ஏற்படுத்தும். அதற்காக இதயப் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிக்கக் கூடாது என்பதில்லை. ஆனால் பக்கவிளைவுகளை கவனித்து அதை தவிர்க்க வேண்டும்.
என்ன செய்வது?
காபி அருந்துவதற்கும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதற்கும் இடையே ஒரு மணி நேர இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். மேலும் பக்க விளைவுகளை நன்கு கவனித்து காபி குடிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)