நம் மொபைல் ஃபோனை நாம் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்கிறோம். அதற்காக டாய்லெட் செல்லும்போதும் உடன் எடுத்துச் செல்ல வேண்டுமென நினைப்பது சரியல்ல. அந்த நேரத்தில் ஈமெயில் செக் பண்ணலாம், மெசேஜ்களுக்கு பதில் அனுப்பலாம், நியூஸ் பார்க்கலாம், மனைவி மக்கள் தொந்தரவின்றி ஒரு கேம் கூட விளையாடலாம் என்று நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது. அதனால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் அதிகம் தெரியுமா? அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
பாத்ரூம்களில் எப்பொழுதும் கிருமிகளும் பாக்ட்டீரியாக்களும் நிறைந்திருக்கும். ஃபோனை அங்கு எடுத்துச் செல்லும்போது ஃபோனிலும் அவை இடம் பிடித்துக்கொள்ளும். போனை தொட்டுவிட்டு கை கழுவும் பழக்கம் பொதுவாக எவருக்கும் கிடையாது.
போனிலுள்ள கிருமிகள் உங்கள் கை, முகம் மற்றும் பிற இடங்களுக்கெல்லாம் பரவி, உடலில் சுலபமாக தொற்று நோய் உண்டாக வழி வகுத்துவிடும். கழிவறைகளில் போனை உபயோகிக்கும் போது தவறுதலாக அது சிங்க் அல்லது டாய்லெட்டிற்குள் விழுந்து விடும் வாய்ப்பு உண்டாகும்.
அப்போது போன் முற்றிலும் நனைந்து, உள்ளிருக்கும் தரவுகள் காணாமல் போவதும் சாத்தியம். விலை உயர்ந்த போன் என்றால் பொருளாதார இழப்பும் உண்டாகும்.
டாய்லெட்டில் அமர்ந்துகொண்டு சோஷியல் மீடியாக்குள் நுழைந்துவிட்டால் வெளிவருவது சுலபமில்லை. 10 நிமிடத்தில் முடித்து விட்டு வெளிவரும் வேலைக்கு நேரம் போவது தெரியாமல் உள்ளேயே உட்கார்ந்து விடுவோம். இது உங்களின் உற்பத்தி திறனை குறையச் செய்யும். தினசரி ரொட்டீனை பாதிக்கும். போனை பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பது இடுப்புக்குக் கீழே உள்ள பகுதியின் ஆரோக்கியதைப் பாதிக்கும். நரம்புகளில் அழுத்தம் அதிகரித்து மூல நோய் (Hemorrhoids) உண்டாகும் வாய்ப்பு உருவாகும். போனில் மூழ்கி இருக்கையில் உடல் இயக்கம் பற்றி இயற்கையாக எச்சரிக்கை(signal) வருவதையும் உணர இயலாது. இதனால் ஜீரணம் மற்றும் இரைப்பை குடல் இயக்கங்கள் பாதிப்படையும்.
பாத்ரூம் செல்லும் இடைவேளையை ரிலாக்ஸ் பண்ணுவதற்கு மட்டுமே உபயோகிப்பது புத்திசாலித்தனம். போனுடன் உள்ளே செல்வது, தொடர்ந்து வேலையில் ஈடுபட்டிருப்பது போன்ற உணர்வை கொடுத்து ஸ்ட்ரெஸ்ஸை உண்டுபண்ணும். சில நிமிடங்கள் ஸ்கிரீனிலிருந்து விடுபடுவதே மன உழைச்சலை நீக்கவும் ஓய்வு பெறவும் உதவி புரியும். இந்தப் பழக்கம் உள்ளவர்கள் இனிமேலாவது அதிலிருந்து விடுபடலாமே.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)