

இரத்தத்திலிருந்து நச்சு கழிவுகளை வெளியேற்றும் வடிகட்டியாக விளங்கும் சிறுநீரகங்களை நன்கு இயக்குவது நம் கையில்தான் உள்ளது. அதற்கான வழிமுறைகளை தெரிந்து வைத்துக் கொண்டால்தான் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி நோயை அண்ட விடாமல் செய்ய முடியும். அதற்கான வாய்ப்பு தான் இது.
சில்லென்று பூத்த சிறுநெறிஞ்சி மூலிகையானது பாதை ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும், காட்டுப்பகுதிகளிலும் நிலத்தோடு படர்ந்து காணப்படும் செடி இனமாகும். அதில் மூன்று வகைகள் உள்ளன.
சிறு நெருஞ்சில், ஆணி நெருஞ்சில் அல்லது பெரு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என்பனவாகும். இதில் சிறுநெருஞ்சிலானது பெண்கள் அணியும் காதணி போல் மஞ்சள்நிற, உருண்டையான கூர்மையான முட்களையும் கொண்டது. நெருஞ்சில் முள் காலில் பட்டதும் வெடுக்கென்று காலை மேலே எடுப்பதால் இதனை கால்குந்தி என்றும் கிராமத்தில் கூறுவது உண்டு. அதனால் தான் "அனிச்சமும் அன்னத் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று வள்ளுவரும் கூறியிருக்கிறார் போலும்.
கோடையில் வெம்மை தாங்காத பொழுது நம் உடலிலும் சூடு ஏறுகிறது. பயணங்களின் போதும் நமது உடலில் உஷ்ணம் மேலே ஏறி களைப்படைவது உண்டு. பொதுவாக உடல் சூட்டை தணித்து குளுமை உண்டாக்கும் மூலிகைகளில் நெருஞ்சில் ஒரு சிறந்த மூலிகை. உடல் பலவீனம் அடைந்தவர்களுக்கு ஒரு டானிக் போல் வேலை செய்து பலவீனத்தைப் போக்கும் வரப்பிரசாதமாக விளங்கும் ஓர் அரிய மூலிகை நெருஞ்சில்.
நெருஞ்சில் சிறுநீரகங்களிலும் நன்கு வேலை செய்யக்கூடியது. சிறுநீரகம் தன் கடமையை சரிவர செய்யவில்லை என்றால் ரத்தத்தில் யூரியா போன்ற கழிவுகள் அதிகரித்து விடும். இதனால் உயிரிழப்பும் நேர வாய்ப்புகள் உள்ளன. உடல் உஷ்ணத்தால் சிறுநீர் கெட்டிப்பட்டு அதனால் உண்டாகும் கல்லடைப்பு மற்றும் சதை அடைப்பு, நீர் அடைப்பு போன்றவைகளும் சிறு நீர் கோளாறுகளே.
இன்று சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மாற்றுச் சிறுநீரகங்களை பொருத்திக் கொள்பவர்களை பார்க்கிறோம். சிறுநீரக பாதிப்பினால் மாற்று சிகிச்சை வரை செல்பவர்கள் கொஞ்சம் முன் எச்சரிக்கையாக கவனம் எடுத்துக் கொண்டால் பழுது படாமல் சிறுநீரகங்களை காத்துக் கொள்ளலாம். மாற்றுச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் கூட நெருஞ்சிலை பயன்படுத்தி இரணமாற்றுவதைத் துரிதப்படுத்தலாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறை இன்று வந்த முறை. அது வந்தபின் காப்பது இன்றைய கண்டுபிடிப்பு. வருமுன் காப்பது அன்றைய கண்டுபிடிப்பு.
நெருஞ்சில் இலையில் இரும்பு சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. சிறு நெருஞ்சிலை சமையலில் பயன்படுத்தும் முறையில் பல்வேறு நோய்கள் குணமாகின்றன.
சிறு நெருஞ்சில் காயையும், வேரையும், பச்சரிசியோடு வேக வைத்து வடிகட்டிய கஞ்சியில் சர்க்கரை சேர்க்காமல் கஞ்சி அருந்தி வர சிறுநீரக அலர்ஜி, நீர் கடுப்பு நீங்கும். உடல் சூடு தணிந்து குளுமை தரும்.
ஒரு பிடி நெருஞ்சிலை எடுத்து சிதைத்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரைகுறையாக வற்றவைத்து வடிகட்டி குடிக்கலாம். இந்த நெருஞ்சில் குடிநீர் தினம் 2 வேளை பருகினால் சிறுநீரக ரணங்கள், நீரடைப்பு, ரத்தத்தில் உப்பு மிகுதி ஆகியன கட்டுப்படும்.
நெருஞ்சில் முள், சம்பா கோதுமை, கொத்தமல்லி விதை, பூனைக்காலி விதை -175 கிராம், சுக்கு 20 கிராம் ஏலரிசி 10 கிராம் எடுத்து அனைத்தையும் நெய்யில் சிறிது வறுத்து எடுத்து பொடி செய்து எடுத்து வைக்கவும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு தூளை ஒரு டம்ளர் பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து சாப்பிட சிறுநீரக கோளாறுகள் அனைத்தும் நீங்கி, உடல் உஷ்ணம் குறைந்து, உடல் வன்மை பெறும் .மேலும் காப்பியினால் ஏற்படும் தீமைகளை காப்பிக்கு பதிலாக இந்த காப்பியை குடிப்பதால் தவிர்க்கலாம்.
அருகன் வேர், நெருஞ்சில், முருங்கை ஈர்க்கு, சீரகம் ஆகியவற்றை 10 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சி கொதி வரும்போது பசு வெண்ணெய் கலந்து இறக்கி வடிகட்டி அத்துடன் சர்க்கரை சிறிது சேர்த்து பருக கோடையின் வெம்மை மற்றும் பயணத்தால் ஏற்படும் உஷ்ணம் தணியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)