நம் உடலின் மற்ற உறுப்புகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் நமது கண்களுக்கும் உண்டு. அவற்றின் ஆரோக்கியதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். அதற்காக நாம் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்பது உலர் பழங்கள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜிங்க் (Zinc) என்னும் கனிமச்சத்து முந்திரியில் அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் A சத்தை ரெட்டினாவுக்குக் கடத்த வல்லது. இது குறைந்த ஒளியிலும் பார்க்க உதவும் திறனாகிய நைட் விஷனை மேம்படுத்தக் கூடியது.
பாதாம் பருப்புகளில் உள்ள வைட்டமின் E, ஃபிரி ரேடிக்கல்களால் கண்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
‘கோல்டன் ரைசின்’ எனப்படும் உலர் திராட்சையில் வைட்டமின் A சத்து அதிகளவில் உள்ளது. இது இரவு நேரங்களில் பார்வைக் குறைபாட்டை உண்டாக்கும் 'மாலைக்கண் நோய்' வருவதைத் தடுக்கிறது. ரெட்டினாவுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.
வால் நட்டில் கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. இது கண்களின் செல்களை சுற்றியிருக்கும் சவ்வுகளை (membrane) உற்பத்தி செய்யவும், பராமரிக்கவும் உதவுகிறது.
பேரீச்சம் பழத்தில் அதிகளவில் உள்ள வைட்டமின் A சத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் தென்பட்டாலும் அவற்றையும் குணப்படுத்தக் கூடியது.
பிஸ்தா பருப்பில் லூட்டின், ஸியாக்சான்தின் (Zeaxanthin) போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகமுள்ளன. இவை கண்களில் கோளாறு உண்டாக்கும் காரணிகளுக்கு எதிராகப் போரிட்டு, இயற்கை முறையில் கண்ணைக் காக்க வல்லவை.
ஆப்ரிக்காட்டில் வைட்டமின் A சத்து அதிகளவில் உள்ளது. இது பார்வைத் திறனை மேம்படுத்துகிறது; வைட்டமின் குறைபாடுகளால் உண்டாகும் பிரச்னைகளைத் தீர்க்கும்.
பிரேஸில் நட்டில் உள்ள செலீனியம் கண் ஆரோக்கியத்தை காக்கிறது. மேலும், வயதாவதன் காரணமாக வரக்கூடும் விழிப்புள்ளிச் சிதைவு அல்லது ஒளிக்குவியச் சிதைவு (Macular degeneration) எனப்படும் நோய் வராமல் காக்கிறது.
கோஜி பெரியிலுள்ள ஸியாக்சான்தின் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட் தீங்கிழைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒளிக் கதிர்களைக் காணும்போது கண்களுக்கு எந்த தீமையும் வராமல் பாதுகாக்கிறது.
பைன் நட்டிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் சிங்க் போன்ற சத்துக்கள் கண்களின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவி புரிகிறது.
இவ்வாறான ஊட்டச் சத்துக்கள் நிறைந்த ட்ரை ஃபுரூட்களை அடிக்கடி உட்கொண்டு கண்களை இமை காப்பது போல் நாமும் காப்போம்.