

கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை மூலம் கண்டறிந்து, நம் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில தேவையான மாற்றங்களை செய்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. கெட்ட கொழுப்பை மாத்திரை இல்லாமல் கரைக்கும் மேஜிக் வழிகள்.
1. நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
முழு தானிய உணவுகளை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. பருப்பு வகைகள், கரையக்கூடிய நார்சத்து நிறைந்த ஓட்ஸ், பார்லி, பீன்ஸ் போன்றவை 'பீட்டா குளுக்கன்' எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
2. காய்கறிகள் மற்றும் பழங்கள்:
தினமும் பல்வேறு வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். பூசணிக்காய், கத்தரிக்காய், கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்வது நல்லது. திராட்சை, ஆரஞ்சு,ஆப்பிள்களில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
3. கொட்டைகள் மற்றும் விதைகள்:
பாதாம், வால்நட்ஸ், ஆளி விதைகள், சியா விதைகள் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் நார்ச்சத்து, தாவர ஸ்டெரோல்கள் மற்றும் நிறைவுறாத கொழுப்புகள் இருப்பதால் இவை உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும். கொட்டைகள் மற்றும் விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை பெருமளவில் குறைக்க உதவுகிறது.
4. பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ்:
கொண்டைக்கடலை மற்றும் பயறு போன்ற பருப்பு வகைகள் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் தாவர அடிப்படையிலான புரத மூலங்கள் நிறைந்துள்ளன. பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். சாலடுகள், சாஸ்கள் மற்றும் ஹம்முஸ் போன்ற பருப்பு வகைகளை அடிப்படையாகக் கொண்ட டிப்ஸில்(dips) அவற்றை பயன்படுத்தவும்.
5. மீன்கள்:
சால்மன், டூனா போன்ற மீன்களில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
6. ஆலிவ் எண்ணெய் மற்றும் சோயா பொருட்கள்:
சோயா பொருட்களில் டோஃபு, இனிப்பு சேர்க்காத சோயா பால், சோயா பீன்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். ஆலிவ் எண்ணெய் போன்ற இதய ஆரோக்கியமான கொழுப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
7. இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள்:
அவகோடா, ஆலிவ் எண்ணெய், நல்ல கொழுப்பு நிறைந்த கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் சால்மன் போன்ற எண்ணெய் நிறைந்த மீன்கள், கொட்டைகள் மற்றும் விதைகள், தாவர எண்ணெய்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் (low cholesterol foods) சேர்த்துக் கொள்வதுடன் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியையும் அளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த தேங்காய், பாமாயில் போன்ற உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை LDL என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)