

'ரேபிஸ்'(Rabies) என்ற நோய் நாய் கடிப்பதால் மட்டும் வருவதில்லை. நாய், குரங்கு, பூனை, வௌவால், கீரிப்பிள்ளை இதுப்போன்ற பல விலங்குகளாலும் மனிதர்களுக்கு பரவும். இந்த விலங்குகளின் உமிழ்நீரில் உள்ள வைரஸ் நமக்கு ஏற்கனவே இருக்கும் காயத்தின் வழியாகவோ அல்லது அது கடிப்பதன் மூலமாகவோ நம் உடலுக்குள் செல்லும். இது தான் 'ரேபிஸ்'(Rabies) பரவுவதற்கான முக்கியமான வழியாகும்.
ரேபிஸூடைய ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கடிப்பட்ட இடத்தில் அரிப்பு, வலி போன்றவை ஏற்படும். உலகத்தில் உள்ள நோய்களிலேயே இது மிக கொடூரமான நோய் என்று சொல்லலாம். இதற்கு பிறகு தான் இதனுடைய கொடூரமான அறிகுறிகள் தெரியவரும். தண்ணீர் குடிக்க முடியாது, தண்ணீரை கண்டாலே பயமாக இருக்கும், காற்று நம் மேலே பட்டாலே பயமாக இருக்கும், குழப்பமான மனநிலை ஏற்படும். கடிப்பட்ட இடத்தில் இருந்து தசைகள் மெதுவாக செயலிழக்க ஆரம்பிக்கும். பக்கவாதம் உடல் முழுக்க பரவி இறுதியாக உயிரிழக்க நேரிடும்.
விலங்கு கடித்த உடனேயே, அறிகுறிகள் வருவதற்கு முன்பாகவே, சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் இதிலிருந்து முழுமையாக தப்பித்துவிட முடியும். ஆனால், அலட்சியமாக இருந்து அறிகுறி தெரிய ஆரம்பித்து விட்டால் பிழைக்க முடியாது என்று சொல்கிறார்கள்.
இதற்கும் நாயை பத்து நாட்கள் சாகாமல் பார்த்துக் கொள்வதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?
இப்போது ஒரு நாய் உங்களை கடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருக்கா இல்லையா? என்று நமக்கு தெரியாது. பொதுவாக ஒரு நாயின் உடலில் ரேபிஸ் வைரஸ் நுழைந்துவிட்டால், அதற்கு Incubation Period இரண்டு வாரத்தில் இருந்து பல மாதங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் நாய் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தான் இருக்கும்.
அது கடித்தாலும் ரேபிஸ் பரவாதாம். ஆனால், அந்த ரேபிஸ் வைரஸ் நாயின் நரம்புமண்டலத்தில் பயணித்து மூளையை அடைந்து அங்கிருந்து உமிழ்நீர் சுரப்பி வழியாக வந்து சேரும் போது நாய் ஒருவரை கடித்தால் ரேபிஸ் நோய் பரவுகிறது.
ஒரு நாயுடைய உமிழ்நீரில் ரேபிஸ் வைரஸ் பரவத் தொடங்கிவிட்டால், அடுத்த பத்து நாட்களில் அதன் அறிகுறியை காட்டத் தொடங்கிவிடும். அதோடு நாயும் இறந்து போகும். உங்களை கடித்த நாய் ஆக்டிவாக ரேபிஸ் வைரஸோடு இருந்ததா? என்பதை தெரிந்துக் கொள்ள அதை பத்து நாட்கள் கண்காணிப்பார்கள்.
பத்து நாட்கள் கழித்தும் அந்த நாய் நன்றாக இருந்தால், அதற்கு ரேபிஸ் இல்லை. நீங்களும் தப்பித்துக் கொண்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், பத்து நாட்களுக்குள்ரேபிஸூடைய அறிகுறிகளை காட்டி அந்த நாய் இறந்துவிட்டால், நீங்கள் தீவிரமான ரேபிஸ் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். அது தான் உங்கள் உயிரை காப்பாற்றும் என்பதை மறக்காதீர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)