
எப்போதுமே உடல் எடை குறைப்பதற்கு இளைஞர்கள் மத்தியில் புதிதாக டயட், டிரெண்ட் உருவாகும். அதுப்போல சமீபமாக பிரபலமான டயட் தான் No sugar diet. இது உண்மையிலேயே உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்குமா? என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பொதுவாக இரண்டு Pattern கடைப்பிடிப்பார்கள். உடல் எடையைக் குறைக்க லெமன் ஜூஸில் தேன் கலந்து குடிப்பது, சுரக்காய் ஜூஸ் தினமும் வெறும் வயிற்றில் குடிப்பது, கொள்ளு ரசம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இதுபோன்ற விஷயங்களை செய்யும் போது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து எடுத்து வந்துவிடும் என்ற நம்பிக்கை.
இன்னொரு பக்கம் என்னவென்றால், எதாவது ஒரு விஷயத்தை தவிர்த்தால், உடல் எடையை குறைக்க முடியும் என்று நினைப்பவர்கள். உதாரணத்திற்கு பால், வெள்ளை நிறத்தில் உள்ள தானியங்கள், சர்க்கரை மட்டும் ஒரு மாதத்திற்கு நிறுத்துவது போன்றவற்றை செய்வார்கள். கொழுப்பு என்பது ஒரு எரிசக்தியின் தேக்கநிலை. ஆபத்துக்காலத்தில் நமக்கு உணவு கிடைக்காத போது எரிசக்தி கொடுக்கவே கொழுப்பு இருக்கிறது.
நம் உடலில் கலோரி தட்டுப்பாடு ஏற்பட்டால் கொழுப்பு எரியும். சாதாரணமாக சாப்பிடுவது மட்டுமில்லாமல் உடலில் ஹார்மோன்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பசி உணர்வு அதிகமாகும். இதை கட்டுப்படுத்த தான் மாவுச்சத்துக்களை குறைத்து புரத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். No sugar diet ல் சர்க்கரையை மட்டும் 14 நாள் அல்லது 21 நாள் நிறுத்துவதாகும். நாம் நேரடியாக சர்க்கரை ஒருநாளைக்கு பயன்படுத்துவது 4 முதல் 5 ஸ்பூன் தான்.
முதலில் சர்க்கரையை நிறுத்த வேண்டும் என்று நினைப்பதே நல்ல விஷயமாகும். இதனால் நமக்கு ஏற்படும் Cravings குறையும். இது உடல் எடையை குறைக்க உதவும். ஆனால், வெறும் சர்க்கரையை மட்டும் குறைத்துவிட்டு மத்த உணவுகளை வழக்கம்போல எடுத்துக் கொண்டால் அது உடல் எடையைக் குறைக்காது.
No sugar diet என்பது ஆரோக்கியத்திற்கான ஒரு துவக்கம். Sugar craving ல் இருந்து விடுபடுவதற்கு உதவும். மாவுச்சத்தை குறைத்து, நல்ல கொழுப்புகளை சேர்த்து, புரதத்தை அதிகரித்தால், காய்கறியை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடல் எடைக் குறையும். அப்படியில்லாமல் வெறும் சர்க்கரையை மட்டும் குறைப்பது ஒரு டயட் கிடையாது. ஆனால், நல்ல ஒரு ஆரோக்கியத்திற்கு இது ஒரு துவக்கமாக அமையும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)