ஐவகை நிலங்களின் பெயர்கள் அங்கு அதிகமாகக் காணப்படும் மரங்கள், மலர்கள் மற்றும் செடிகளாலேயே அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், பாலை நிலத்தின் முக்கிய மரமாக வாகை மரம் இருந்துள்ளது. ஆகவே, இது வறட்சியைத் தாங்கி வெப்பமான பகுதிகளில் வளரக்கூடிய மரமாகக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய மரமான வாகை மலரை, வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூட்டி வெற்றிக் களிப்பைக் கொண்டாடி இருக்கின்றனர். வாகை மரமானது காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மையான காற்றைத் தந்து மண்ணரிப்பை தடுப்பதில் பெரும் பங்காற்றும்.
வாகையில் சிறுவாகை, பெருவாகை, நிலவாகை, காட்டு வாகை, செவ்வாகை, கருவாகை, தூங்குவாகை என பல வகைகள் உள்ளன. வாகை மரத்தின் பட்டை, இலை ,பிசின், பூ என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
இதன் மரத்தைக் கொண்டு கதவு, ஜன்னல், பருப்பு கடையும் மத்து, தானியப் பெட்டி, உலக்கை போன்ற மரச் சாமான்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மரச் செக்கு உலையில் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்தாலும் விதைகளை ஆட்டி சூடேற எண்ணெய்களை பிரித்தெடுக்கும் சக்தி இந்த வாகை மரத்திற்கு உண்டு என்பதால்தான் செக்குகளில் வாகை மரத்தின் செக்குகள் முதல் தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையின் சத்துக்களும் மருத்துவ குணங்களும் குறையாமல் கிடைக்கவும் இது உதவுகிறது.
மருத்துவப் பயன்கள்:
* வாகை மரத்தின் இலைகளை சுத்தமான அம்மியில் அரைத்து கண் இமைகளில் வைத்து கட்டினால் கண் சிவப்பு மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
* வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி சலித்து ஒரு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வர பசியைத் தூண்டும். மேலும், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
* ஒரு கிராம் வாகை மரப் பொடியை வெண்ணையில் கலந்து எடுத்துக் கொண்டால் உள்மூலம், இரத்தம் மூலம், வெளி மூலம் ஆகியவை குணமாகும். ஒரு கிராம் வாகை மரப்பொடியை மோரில் கலந்து குடித்தால் பெரும் கழிச்சல் நோய் குணமாகும்.
* இப்பொடியை காயங்களில் வைத்து கட்டினால் புண்கள் விரைவில் ஆறும். மூக்கடைப்பு குணமாக இதன் கொழுந்துகளை நசுக்கி மூக்கில் நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். மூட்டு வலி மற்றும் வீக்கம் குணமாக இதன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் வைத்து கட்டினால் வலி குறையும். மேலும். யானைக்கால் நோய் போன்றவற்றிற்கும் இந்த மூலிகையை பயன்படுத்தலாம்.
* வாகை பூக்களை 30 எடுத்து 20 மிளகு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது அரை லிட்டராக வற்றிய பிறகு தேன் கலந்து குடித்து வந்தால் விஷ கடியால் ஏற்படும் தொந்தரவு, கை கால் குடைச்சல் குத்தல் சரியாகும். வாகை மரத்தின் விதைகள் மற்றும் பூ மொட்டுக்களை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கை கால் வலி மற்றும் தொழுநோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வாகை பூக்களை கஷாயம் வைத்து தேன் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு குணமாகும். வாகை மரத்தின் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் தொழு நோய்க்கு மருந்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். வாகை மரத்தின் பூ நறுமண தைலம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
வாகை வெற்றிக்கான மலர் மட்டுமல்ல, வாகை மரத்தின் அனைத்து பாகங்களுமே மனித குலத்தின் பல நோய்களுக்கு மருந்தாகின்றன.