மூட்டு வலியை மட்டுமல்ல; பல்வேறு நோய்களையும் விரட்டும் முடக்கத்தான் கீரை!

முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரைhttps://tamilwealth.com

முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த தாவரம் என்பதோடு, இது சிறந்த மருத்துவ மூலிகைக் கீரையாகும். முடக்கத்தான் கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டவையாகும். இது தன்னிச்சையாக வளரக்கூடியது.

சிலருக்கு 40 வயதுக்கு மேல் இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலையாகவும் இருக்கலாம்.. இந்தியாவில் 65 சதவிகித மக்களுக்கு இந்த மூட்டு வலி பாதிப்பு உள்ளது.. இதற்கெல்லாம் சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும். மூட்டுவலி பிரச்னை இருந்தால், தொடக்கத்திலேயே இந்த கீரையை எடுத்து கொண்டால், பூரண சுகமாகும். இந்தக் கீரையில் ‘தாலைட்ஸ்’ என்ற பொருள் உள்ளது! இது மூட்டுகளில் படிந்திருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து மூட்டு வலியை விரட்டுகிறது.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் இருப்பதால் இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைச் சீர்செய்யும். பாதிக்கப்பட்ட இடங்களில் முடக்கத்தான் இலையில் பற்று போட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலிகளைப் போக்க முடக்கத்தான் இலைகளை நன்றாகக் கசக்கி, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி சரியாகும்.

இக்கீரையை வதக்கிப் பிழிந்து சாறை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட காதுவலி, காது குத்து, சீழ்வடிதல் முதலியன நீங்கும். மூல நோய்களுக்கும் இக்கீரை சிறந்த மருந்தாகும். பச்சையாக முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும் என கூறப்படுகிறது.

முடக்கத்தான் கீரையை இடித்துப் பிரசவிக்கும் நிலையிலுள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டுவதினாலும், இலையின் சாறை பூசுவதினாலும் சிறிது நேரத்திற்குள் சுகப்பிரசவம் ஆகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து அடிவயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

எண்ணெய்யில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து தலைக்குத் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதைத் தடுக்க முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோயின் கடுமை தன்மை குறையும். இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உடலில் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.

வயிற்றுப்புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்னைகளைக் குணமாக்கும். தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் அல்சர் பிரச்னை முற்றிலுமாக விரைவில் குணமாகும்.

முடக்கத்தான் இலைகளை வெயில் படாமல் நிழலில் உலர வைத்து பொடியாக்கி வைத்து கொண்டால், இருமல் இருக்கும்போது பயன்படுத்தலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் உப்பு, முடக்கத்தான் பொடி சேர்த்து கலந்து சாப்பிடலாம். அல்லது இளஞ்சூட்டு நீரில் இந்த பொடியை கலந்து குடித்தால் இருமல் கட்டுப்படும். குழந்தைகளுக்கும் தேனில் கலந்து நாவில் தடவி விடலாம்.

இதையும் படியுங்கள்:
அளவுக்கு மிகுதியான கொழுப்பைக் கரைக்கும் ஐந்து வகை பயறு வகைகள்!
முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் இலைகளை கைப்பிடி அளவு கொதிக்க வைத்து, க்ரீன் டீ போல் குடித்தால் உடல் சோர்வு மறையும். இது லேசாக கசப்போடு இருக்கும் என்பதால், தேன் சேர்த்து குடிக்கலாம். நரம்புகளை பலப்படுத்தக்கூடியது. உடலில் காயங்கள் ஏதாவது ஏற்பட்டாலோ அல்லது வலி அதிகமாக இருந்தாலோ, நல்லெண்ணெயில் இந்த இலைகளை காய்ச்சி, அந்த எண்ணெயை அடி பட்ட இடத்தில் தடவினால் வலி குறையும்.

இந்தக் கீரையை அதிகம் சேர்த்து கொண்டால், உடம்பில் வாதத்தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில் நனைத்து, மூட்டு பகுதிகளில் தேய்த்து வந்தாலும், நிவாரணம் கிடைக்கும். முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி, அதனை கட்டி வந்தால் மூட்டு வலி வீக்கம் குறையக்கூடும்.

முடக்கத்தான் கீரையை வைத்து, முடக்கத்தான் தோசை, முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் செய்யலாம். ஆனால், அந்தக் கீரையை கொதிக்க வைத்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அதன் மருத்துவ சத்துக்கள் கொதிப்பில் அழிந்துவிடும். முடக்கத்தான் கீரை, சீரகம், வர மிளகாய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, தோசை மாவு, சிறிது உப்பையும் சேர்த்து கரைத்து அரைமணி நேரம் வைத்துவிடவும். தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு, இதில் தோசை சுட்டு சாப்பிடலாம்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய், துவரம் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, கீரையையும் எண்ணெயில் சேர்த்து வதக்கி, புளி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, வறுத்த துவரம் பருப்பு, கீரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்தால் துவையல் ரெடி. அல்லது துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்புகளுடன் சேர்த்து கூட்டு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com