வில்வம்: சிவபூஜைக்கு மட்டுமல்ல; நல் ஆரோக்கியத்துக்கு மருந்தும் கூட!

Vilvam health benefits
Vilvam health benefits
Published on

சிவபிரானுக்கு பூசனை மூலிகை ஆன வில்வம் (Vilvam) ஒரு கற்பகமூலிகையாக, அதாவது இந்த பிணிக்கு மட்டுமே மருந்தென்று அமையாது எல்லா பிணிகளையும் நீக்கி வாழ்நாளை நீட்டிக்கும் தன்மையுடையதாகும். கூவிளம், கூவிளை என்ற பெயர்களாலும் குறிப்பிடப் பெறும் வில்வமானது நமக்கு எவ்வாறு மருந்தாக பயன்படுகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.

1. இதன் இலை வெப்பமகற்றும். நோய் நீக்கி உடல் தேற்றும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். பழவோடு காய்ச்சல் போக்கும். வேர் ,பிசின் ஆகியவை காமம் பெருக்கும்.

2. கண் நோய் தீர தளிரை வதக்கி கண்களில் ஒத்தடமிட கண்வலி, கண் அரிப்பு, கண் சிவப்பு ஆகியவை நீங்கும். காயைப் பாலில் அரைத்து தலையில் தேய்த்து வைத்திருந்து குளித்து வர கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி அடையும்.

3. உடல் ஒளி பெற வில்வத்தளிர் 5 கிராம் எடுத்து மென்மையாய் அரைத்து பாலில் கலந்து குடித்து வர மேக நோய்கள் அகலும், உடல் ஒளி பெறும்.

4. வயிறு சம்பந்த நோயகல, வில்வ இலைப்பொடி அரை தேக்கரண்டி வெண்ணை அல்லது நெய் கலந்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர எரிச்சல், பித்தம், வயிற்று வலி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், பசியின்மை, நீர் எரிச்சல் தீரும்.

5. இருமல் காய்ச்சல் தீர கைப்பிடி இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் சம அளவு எடுத்து இடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி கால் பாகமாக சுண்டியவுடன் அந்த நீரை கொடுத்து வர எவ்வித காய்ச்சலும் தீரும்.

6. கல்லீரல் மற்றும் இதர நோய்களுக்கு ஐந்து வில்வ இலைகளையும் மூன்று மிளகையும் அரைத்து பாலில் கலக்கி மூன்று அல்லது நான்கு மாதங்கள் சாப்பிட்டு வர வயிறு கல்லீரல் ஆகியவற்றில் உள்ள புற்றுநோய் குணமாகும்.

7. வில்வ இலைகளை காயவைத்து தூளாக்கி காலையில் ஒரு ஸ்பூன் மென்று 30 நாட்கள் சாப்பிட்டு வர திக்குவாய் சரியாகும்.

8. வில்வப் பிஞ்சை கொட்டைப் பாக்கு அளவுக்கு அரைத்து எருமைத் தயிரில் கொடுக்க குழந்தைகளுக்கு காணும் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு ஆகியவை தீரும்.

9. பழச் சதையை உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவுக்கு நாள்தோறும் மூன்று வேளை சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர பேதி, சீதபேதி, பசியின்மை தீரும்.

10. இலையை உலர்த்திப் பொடித்து அரை தேக்கரண்டி தேனில் குழைத்து காலை ,மாலை கொடுத்து வர நீர்க் கோவை, தலைவலி, மண்டைக் குடைச்சல், சீதள இருமல் ,தொண்டைக் கட்டு, காசம் ஆகியவை தீரும்.

11. இலையை அரைத்து அந்த விழுதை சாப்பிட்டு குளிர் நீரில் மூழ்கி வர பெரும்பாடு தீரும்.

இதையும் படியுங்கள்:
அல்லி மலர் கொண்டாட்டம்! வியக்க வைக்கும் மருத்துவ ரகசியம்!
Vilvam health benefits

இப்படி எல்லா வகையிலும் நன்மை பயக்கும் கற்ப மூலிகையான வில்வத்தை மருந்தாகக் கொள்ளும் பொழுது முறைப்படி சித்த வைத்தியரை அணுகி அதன் பயனை பெறுவோம் ஆக!

-இந்திராணி தங்கவேல்

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com