

அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப் பற்றி மட்டும் பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து, காலையில் மூடும். மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும், நுண் குழலுடைய இலைக் காம்புகளை உடைய நீர்ச் செடி. இதன் மலர்கள் நீர் மேல் மிதந்து கொண்டிருக்கும்.
எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்னிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூதான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். இதற்கு ஆம்பல், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.
வெள்ளை நிற மலர்கள் உடையது வெள்ளை அல்லி எனவும், செந்நிற மலர்களை உடையது செவ்வல்லி, அறக்காம்பல் எனவும், நீல மலர்களுடையது கருநெய்தல், குவளை எனவும் வழங்கப்படுகிறது. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் பூக்கின்றன. இதன் இலை, பூ (விதை, கிழங்கு ஆகியவை மருத்துவ (Lily medicine) பயன் உடையது.
1. இதன் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பத்தை அகற்றும் குருதிக்கசிவையும் தடுக்கும்.
2. இதன் இலையை நீர் விட்டு காய்ச்சி ஆறிய பின் புண்களைக் கழுவி வந்தால் எளிதில் ஆறும்.
3. அல்லிக்கிழங்கை உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு பாலில் 5 கிராம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும்.
4. கருநெய்தல் பூவை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து தேன் பதமாக காய்ச்சி 10 மில்லி அளவு காலை, மாலை சாப்பிட்டு வர மூளை கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும், இதய படபடப்பை தணிக்கும்.
5. உலர்ந்த வெள்ளை இதழ்களை நீரில் ஊற வைத்து வடித்த தண்ணீரை 30 மில்லியாக காலை, மாலை குடித்து வந்தால் சிறுநீர் ரத்தம், சிறுநீர் பாதையில் உள்ள புண், சிறுநீர் அதிகமாக கழிதல், தாகம், காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
6. அல்லிப்பூவிற்கு நீரிழிவை சீராக்கும் குணம் உள்ளது. வெப்ப சூட்டால் ஏற்படும் கண் நோய்களை தீர்க்கும். அல்லிப் பூவை அரைத்து சர்பத் செய்து சாப்பிடலாம்.
7. உடலில் ரத்தம் சுத்தமாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். செவ்வல்லியின் இதழ்களை காய வைத்து பொடி செய்து காலை, மாலை இருவேளை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
8. வெள்ளை அல்லிப் பூவையும், ஆவாரம் பூவையும் சம அளவு எடுத்து போதிய அளவு சர்க்கரை சேர்த்து நீரில் காய்ச்சி கூழ் போல் ஆன பின் இறக்கி ஆற வைத்து காலை, மாலை பசும் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
9. கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அல்லி இலையை கண்களை மூடி அதன் மீது வைத்து ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் சரியாகும்.
10. கோடைக்காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். இதற்கு அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.
11. உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் தாகம் தீராது. இதற்கு வெள்ளை அல்லி மலர்களை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தாகம் தீரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)